×

இந்தி திணிப்பு விவகாரம் அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி: காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தமிழகத்துக்கு அமித்ஷா வந்தால் கருப்பு கொடி காட்டப்படும் என்று காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக காங்கிரஸ் சார்பில் சிறப்பு ஆலோசனை கூட்டம் சென்னை சத்யமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். மேலிட பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத், வல்ல பிரசாத்  முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், கிருஷ்ணசாமி, கே.ஆர்.ராமசாமி, எம்பிக்கள் வசந்தகுமார், ஜெயக்குமார், முன்னாள் எம்பிக்கள் விஸ்வநாதன், ராணி, பொருளாளர் நா.சே.ராமசந்திரன்,  இரா.மனோகர்,அஸ்லாம் பாஷா, ஹசன் ஆரூண், ஊர்வசி அமிர்தராஜ், எஸ்.கே.நவாஸ், ரங்கபாஷ்யம், நாஞ்சில் பிரசாத், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், ரூபி மனோகரன், வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விபரம் வருமாறு: அரசியல் ரீதியாக பழிவாங்கும் வகையில் பாஜ அரசு, ப.சிதம்பரம், டிகே.சிவக்குமார் ஆகியோரை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்கள் விரோத போக்கை  எதிர்த்தும், பொருளாதார வீழ்ச்சியால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிற அவல நிலையை மக்களிடம் பிரசாரம் செய்யும் வகையில் அக்டோபர் 10 முதல் 15ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கருத்தரங்குகள் நடத்துவது, அக். 15 முதல் 25ம்தேதி வரை கண்டன ஆர்பாட்டம் நடத்த வேண்டும்.பொருளாதார மந்தநிலை ஏற்படுவது சகஜமான ஒன்று என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பூசி மொழுகியிருக்கிறார். நிலைமையை முற்றிலும் உணராமல் அதற்குரிய தீர்வுகளை காணாமல் செயல்பட்டு வரும் பிரதமர் மோடி  தலைமையிலான பாஜ ஆட்சியை எதிர்த்து மக்களை திரட்டுவது, இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆணவத்தோடு பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டிக்கும் வகையில், அவர் தமிழகம்  வரும்போது தமிழக காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags : Amit Shah ,meeting ,consultation ,congress ,Amit Shah Opposition , Hindi ,Amit Shah,black flag,congressional consultation
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...