கிராமத்துக்கு வெளியே தடுத்து, திருப்பி அனுப்பினர் தாழ்த்தப்பட்ட பாஜ எம்பி.யை ஊருக்குள் விட மறுத்த மக்கள்

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா மக்களவை  தொகுதி உறுப்பினராக இருப்பவர் நாராயணசாமி. தாழ்த்தப்பட்ட வகுப்பை  சேர்ந்தவரான இவர், நேற்று தொகுதிக்கு உட்பட்ட  பாவகடா  தாலுகாவில் உள்ள பென்னனஹள்ளி  கொல்லரஹட்டி கிராமத்திற்கு நேற்று முன்தினம் சென்றார்.  மக்கள்  குறைகளை கேட்பதற்காகவும்,  கிராமத்தினரின் சுகாதாரத்திற்காகவும் பெங்களூரு பயோகான்  கம்பெனி மற்றும் நாராயண இருதாலயா மருத்துவமனை டாக்டர்களுடன் அவர் அங்கு சென்றார். அவருடன் சித்ரதுர்கா மற்றும்  துமகூரு மாவட்ட பாஜ  நிர்வாகிகளும் உடன் சென்றனர்.நாராயணசாமி கிராமத்திற்கு வரும் தகவல்  கிடைத்ததும் கிராமத்தை சேர்ந்த சில முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள்  கிராமத்தின் நுழைவு வாயில் நாற்காலிகளை தடுப்பாக போட்டிருந்தனர்.  கிராமத்தினர் கூடி இருப்பதை பார்த்த  நாராயணசாமி, தன்னை வரவேற்பதற்காக  கூடியுள்ளதாக நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்.

Advertising
Advertising

ஆனால், அந்த மகிழ்ச்சி சில  நிமிடங்களில் நீர்த்து போனது. கிராமத்திற்குள் செல்ல முயன்ற எம்பி.யை தடுத்து  நிறுத்திய மக்கள், ‘‘எங்கள்  கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த  யாரையும் அனுமதிப்பதில்லை. இதை காலம், காலமாக பின்பற்றி வருவதால் உங்களை  அனுமதிக்க முடியாது. என்ன சொல்ல வேண்டுமானாலும் இங்கே சொல்லுங்கள்,’’ என்றனர்.கிராம  மக்களின் பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்த நாராயணசாமி, ‘இன்னும் தீண்டாமை  உள்ளதா?’ என்று வேதனையை வெளிப்படுத்தியதுடன், என்ன நோக்கத்திற்காக  வந்துள்ளேன் என்பதை எடுத்து கூறியும் அவரை கிராமத்திற்குள்  செல்லவிடாமல்  தடுத்தனர். உடனிருந்த பாஜ தலைவர்கள் கூறியும் கிராமத்தினர் கேட்காமல்  திருப்பி அனுப்பி விட்டனர். இந்த தகவல் காட்டு தீப்போல் பரவியது. உடனடியாக  தும்கூரு மாவட்ட கலெக்டர் ராகேஷ்குமார், பாவகடா தாலுகா தாசில்தார் உள்பட  அரசு  அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பென்னனஹள்ளி  கொல்லரஹட்டி கிராமத்தினர் நடந்து கொண்ட முறைக்கு கட்சி பேதமில்லாமல்  அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Related Stories: