ஆயிரத்திற்கு மேற்பட்ட புகார்கள் பதிவு மாநகராட்சி பகுதிகளில் 7000 பேனர்கள் அகற்றம்: ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில், மொத்தம் இதுவரையில் 7 ஆயிரம் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை, பள்ளிக்கரணை அருகே உள்ள ரேடியல் சாலையில் சுப என்ற இளம்பெண் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது, திருமண நிகழ்ச்சிக்காக முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்று வைத்திருந்த பேனர் விழுந்து  பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்றுவது தொடர்பாக புகார் அளிக்க சிறப்பு எண்கள் மற்றும் சிறப்பு வாகனங்களை சென்னை மாநகராட்சி அறிவித்தது. அதன்படி சென்னை  மாநகராட்சி, காவல் துறையும் இணைந்து ஒரு வட்டாரத்திற்கு ஒரு வாகனம் வீதம் தனி அலைபேசி எண்ணுடன் கூடிய மூன்று ரோந்து வகனங்களை அறிமுகப்படுத்தியது. 1 முதல் 5 மண்டலம் வரையிலான வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190205 என்ற  எண்ணிற்கும்,   6 முதல் 10 மண்டலம்  வரையிலான மத்திய வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190698 என்ற  எண்ணிற்கும்  11 முதல்  15 மண்டலம் வரையிலான தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445194802 என்ற  எண்ணிற்கும் தொடர்பு கொண்டு விளம்பர பதாகைகள் தொடர்பான புகார்களை தெரிவித்தால் ரோந்து வாகனங்களில் பணியில் உள்ள அலுவலர்கள்  உடனடியாக சம்பந்தபட்ட இடத்திற்கு நேரடியாக சென்று விளம்பர பதாகைகளை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து விளம்பரம் அமைத்தவர்கள் குறித்த தகவல்களையும் பதிவு செய்த பின்னர் அவற்றை அகற்றி சம்பந்தபட்ட நபர்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெவித்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றி வருகின்றனர். இதுவரை 7000 ஆயிரம் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி : சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களை மூன்றாக பிரித்து ஊழியர்கள் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 7000 பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.   ஒவ்வொரு வட்டாரம் வாரியாக  பேனர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தொடர்ந்து பேனர்கள் தொடர்பாக பல்வேறு புகார்களை தொலைபேசி மூலமாக தெரிவித்து வருகின்றனர். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பொதுமக்களிடம்  இருந்து பெறப்பட்டுள்ளன. மூன்று ரோந்து வாகனங்கள் மூலம் பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் பேனர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: