மேற்கு வேளச்சேரி கக்கன் நகரில் பாழடைந்து கிடக்கும் சிறுவர் பூங்கா: மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

ஆலந்தூர்: மேற்கு வேளச்சேரி கக்கன் நகரில் பாழடைந்து கிடக்கும் சிறுவர் விளையாட்டு பூங்காவை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு வேளச்சேரி 177வது  வார்டுக்கு உட்பட்ட கக்கன் நகர் 3வது குறுக்கு தெருவில் பாழடைந்த கழிப்பிடம் இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த  கழிப்பிடத்தினை இடித்துவிட்டு பூங்கா அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள்  கோரிக்கை வைத்தது குறித்து தினகரன் நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து  கழிப்பிட கட்டிடம் இடிக்கப்பட்டு அங்கு  சிறுவர் விளையாட்டு பூங்காவும்  அமைக்கப்பட்டது. ஆனால் பூங்கா அமைக்கப்பட்ட நாளில் இருந்து இதனை யாரும் சரியாக பராமரிப்பதில்லை. மேலும் பூங்காவிற்குள்ளும்,  வெளியிலும் குப்பை கழிவுகள் தேங்கி  துர்நாற்றம் வீசுகிறது.

இங்குள்ள விளையாட்டு உபகரணங்களை சிறுவர்கள் உபயோகிக்க முடியாதபடி  நாசமாகவும்   எங்கு பார்த்தாலும் குப்பைக்கூளங்களும், மதுபாட்டில்களும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பூங்காவிற்கு சிறுவர்களை அனுப்புவதை பெற்றோர்கள் நிறுத்திவிட்டனர். இதற்கிடையே பூங்காவினை பராமரிக்க முடியாத சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சமீபத்தில் பூங்காவுக்கு பூட்டு போட்டுவிட்டனர். இதனால்  சிறுவர்கள் விளையாட முடியாத நிலையும், அப்பகுதி மக்கள் நடைபயிற்சி செய்ய முடியாத அவலமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பூங்காவினை சுத்தம் செய்தும், விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து புதுப்பொலிவுடன் மாற்றித்தர மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: