வி.ஐ.டி பல்கலைக் கழகத்துக்கு ‘சீர்மிகு நிறுவனம்’ அங்கீகாரம் : மத்திய அரசு வழங்கியது

சென்னை: வேலூர் விஐடி என்னும் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்துக்கு  ‘சீர்மிகு நிறுவனம்’ என்ற அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து, சர்வதேச பல்கலைக் கழகங்களுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு உலக  தரவரிசைப் பட்டியலில் விஐடி முன்னேறும் என அதன் வேந்தர் விசுவநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஐடி வேந்தர் விசுவநாதன் கூறியதாவது: நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மத்திய அரசின் சீர்மிகு அங்கீகாரத்துக்காக பட்டியலிடப்பட்டன. அதில் 10 அரசு கல்வி நிறுவனங்கள், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த பட்டியலில் வேலூர்  விஐடி பல்கலைக்கழகமும் இடம் பெற்று மத்திய அரசின் சீர்மிகு நிறுவனம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த கல்வி நிறுவனம் தன்னிச்சையாக செயல்பட உரிமை பெற்றுள்ளது. கல்வி, நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவற்றில்  தன்னிச்சையாக தரமான முயற்சிகளை எடுக்க முடியும். இதன் மூலம் விஐடியில் கல்வியின் தரத்தை உயர்த்துவதோடு, உலக கல்வி நிறுவனங்கள் தர வரிசையில் விஐடி இடம் பெற வாய்ப்புள்ளது.

இன்னும் 3 ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த 500 பல்கலைக் கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் விஐடி இடம் பெறுவதற்கான போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக கணினியும் தொழில் நுட்பமும், வேதியியல், மின்,  மின்னணுவியல் பொறியியல் ஆகிய பிரிவுகளில் 550 தரவரிசை பட்டியலில் விஐடி இடம் பெற்றுள்ளது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா கனவு திட்டத்துடன் இணைந்து உயர்தர ஆராய்ச்சியில் ஈடுபடவும், தொழில்களுக்கு உதவுவதற்கும், புதிய தயாரிப்புகளை உருவாக்கவும், வெளிநாடுகளில் உள்ள உயர்நிலை நிறுவனங்களுடன் இணைந்து  விஐடி செயல்படும். இந்திய தொழில்கள், சர்வதேச அளவில் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களுடன் இணைந்து பல புதுமையான இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை தொடங்கவும் விஐடி திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், இணைய இயற்பியல் அமைப்பு, தன்னாட்சி இயக்கம், ஏற்புடைய தொழில் நுட்பம், ஸ்மார்ட் கட்டமைப்புகள், நிதித் தொழில் நுட்பம், நிலையான இணைய பாதுகாப்பு, நவீன உபகரண  தொழில்நுட்பம், வளர்ந்த பொருளாதாரம் போன்ற துறைகளில் விஐடி கவனம் செலுத்தும். விஐடிக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தின் மூலம் புதிய ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் புதிய பாடத்திட்டங்களையும் அறிமுகம் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: