மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி மாநகராட்சி ஆணையர் பதில் அளிக்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு தீனா (14) என்ற மகன் இருந்தார். தீனா எம்ஜிஆர் நகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். விடுமுறை நாட்களில் பெற்றோரை பார்ப்பதற்காக முகலிவாக்கம் வீட்டிற்கு வந்துவிடுவார். கடந்த 15ம் தேதி விடுமுறை என்பதால் பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது பேச முடியாத தனது நண்பர் ஒருவருடன் மொபட்டில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில், மொபட்டில் பெட்ரோல் தீர்ந்துள்ளது. இதனால் இருவரும் முகலிவாக்கம் தனம் நகர் அருகே பெட்ரோல்  பங்க்கை நோக்கி தள்ளி கொண்டே சென்றனர்.  அப்போது அந்த இடத்தில் சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் ஒரு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதில் தெருவிளக்கு மின்சாரத்திற்காக புதைக்கப்பட்டிருந்த கேபிளை சரியாக மூடாமல்  சென்றுள்ளனர். இதனால் மழை பெய்து அந்த பள்ளத்தில் நீர் தேங்கியுள்ளது. அந்த நீரில் மின்சாரம் இருந்துள்ளது.

இந்தநிலையில் மொபட்டை தள்ளி வந்த தீனா மீது மின்சாரம் பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்தில் பலியானார். அவரை மாற்றுத்திறனாளி நண்பர் காப்பற்ற முயன்றும் இறந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை  பார்த்த மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்கு பதிவு செய்தது. பின்னர் விசாரணை நடத்திய நீதிபதி, மாநகராட்சி பணியாளர்கள் பள்ளத்தை சரிவர மூடாமல் சென்றது மனித உரிமை மீறல் ஆகாதா?  பணியில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? சிறுவனை இழந்த குடும்பத்தினருக்கு என்ன நிதியுதவி வழங்கப்பட்டது? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். மேலும் இதுகுறித்து சென்னை மாநகராட்சி  ஆணையர் மற்றும் மின் உற்பத்தி பகிர்மான கழக தலைவர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: