கோவை சிறுமி, சிறுவன் கொலை வழக்கில் குற்றவாளியின் தூக்கு தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: கோவையை சேர்ந்த பள்ளி சென்ற அக்கா, தம்பியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு வரும் 20ம் தேதி நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கோவையில் கடந்த 2010ம் ஆண்டு பள்ளிக்கு புறப்பட்ட அக்கா, தம்பி இருவரை டிரைவர் மோகன்ராஜ் என்கிற மோகனகிருஷ்ணன், அவரது நண்பர் மனோகரனின் உதவியுடன் பொள்ளாச்சி மலைப்பகுதிக்கு காரில் கடத்தி சென்றார். அங்குள்ள பி.ஏ.பி வாய்க்காலில் தள்ளி இருவரையும் கொலை செய்தனர். இதுதொடர்பாக கோவை போலீசார் வழக்குப் பதிந்து மோகன்ராஜ், மனோகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. விசாரணைக்காக அழைத்து சென்றபோது தப்பி ஓடிய வேன் டிரைவர் மோகன்ராஜை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மனோகரனுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் இரட்டை தூக்கு, 3 ஆயுள் ஆகிய தண்டனைகளை வழங்கி தீர்ப்பளித்தது. இதையடுத்து இதே உத்தரவையே சென்னை உயர் நீதிமன்றமும் பின்னர் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதையடுத்து மனோகரனுக்கு வரும் 20ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்த நிலையில், தூக்கு தண்டனையை வரும் 20ம் தேதி நிறைவேற்ற தடை விதிக்க கோரி குற்றவாளி மனோகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், சுபாஷ் ரெட்டி மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ‘மனோகரனுக்கு வரும் 20ம் தேதி நிறைவேற்றப்பட உள்ள தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை மீண்டும் விரிவாக விசாரிக்க வேண்டும்’ என வாதிடப்பட்டது. இதையடுத்து வரும் 20ம் தேதி மனோகரனுக்கு நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: