லால்பாக் ராஜாவுக்கு பக்தர்கள் அளித்த ஆபரணங்கள் ஏலம் முதல் நாளில் 1.25 கோடி வசூல்

லால்பாக்: மும்பையில் பிரசித்திப் பெற்ற லால்பாக் ராஜா கணபதிக்கு பக்தர்கள் அளித்த ஆபரணங்களை ஏலம் விட்டதில் முதல் நாள் மட்டும் 1.25 கோடி வசூலானது. கணபதி விழாவை முன்னிட்டு லால்பாக் ராஜா விநாயகருக்கு பக்தர்கள் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பணம் என காணிக்கை செலுத்தினர். 10 நாட்கள் நடந்த விழாவில் பணமாக மட்டும் ₹5.05 கோடி ரூபாய் காணிக்கை வசூலானது. இது தவிர 4 கிலோ 286 கிராம் தங்க ஆபரணங்கள், 80 கிலோ 300 கிராம் வெள்ளி ஆபரணங்கள் ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் ஆபரணங்களை லால்பாக் ராஜா கணபதி மண்டல் நிர்வாகிகள் ஏலம் விடுவார்கள். இந்த ஆண்டும் நேற்று முன்தினம் இரவு ஏலம் தொடங்கியது. மூன்றாவது நாளாக இன்றும் ஏலம் நடைபெறுகிறது. முதல் நாளன்று ஆபரணங்களை ஏலம் விட்டதன் மூலம் லால்பாக் ராஜா கணபதி மண்டலுக்கு 1.25 கோடி கிடைத்தது. முதல் நாளன்று பெரிய மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்கள் ஏலத்தில் விடப்பட்டன. இதில், அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்திய தங்கத்தட்டு, 2 கிண்ணங்கள், 2 ஸ்பூன்கள், ஒரு கிளாஸ் ஆகியவை அடங்கிய டைனிங் செட் அதிகப்பட்சமாக 43 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த தங்க டைனிங் செட் 1,237 கிராம் எடை கொண்டதாகும்.

Advertising
Advertising

ஒரு கிலோ எடை கொண்ட தங்கக்கட்டி ஒன்று 39.51 லட்சத்துக்கு ஏலம் போனது. வெள்ளியால் செய்யப்பட்டு தங்க மூலாம் பூசப்பட்ட 500 கிராம் எடை கொண்ட லால்பாக் ராஜாவின் கால் பாதங்கள் 66 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது. ஒரு தங்க நெக்லஸ் 1.50 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த தகவலை லால்பாக் ராஜா கணபதி மண்டல் பொருளாளர் மங்கேஷ் தல்வி தெரிவித்தார். ஒரு பெரிய வெள்ளி நெக்லஸ் மற்றும் தங்கச் செயின்கள் முறையே 1 லட்சம் மற்றும் 1.50 லட்சத்துக்கும், 30 கிராம் தங்க மோதிரம் ஒன்று ₹94 ஆயிரத்துக்கு ஏலம் போனதாகவும் மங்கேஷ் தல்வி கூறினார். தற்போதைய சந்தை மதிப்பிலேயே தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் ஏலம் விடப்பட்டதாகவும் புதன் கிழமை வரை மற்ற ஆபரணங்கள் ஏலம் விடப்படும் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு லால்பாக் ராஜா விநாயகருக்கு நகைகள், பணம் என மொத்தம் ₹9 கோடி காணிக்கை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: