பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நிதின் கட்கரி மறைமுக எதிர்ப்பு : தானாக முன்னேற வேண்டும் என்று சர்ச்சை பேச்சு

நாக்பூர்: ‘மகாத்மா புலே சிக்‌ஷன்’ சன்ஸ்தா அமைப்பு நாக்பூரில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட வேண்டும். அதே சமயத்தில் இடஒதுக்கீட்டால் மட்டுமே ஒரு சமூகத்தினர் முழுமையான முன்னேற்றம் அடைந்து விடுவார்கள் என்பதில் உண்மை கிடையாது. அதிகபட்ச இடஒதுக்கீடு பெற்றுள்ள வகுப்பினர் முன்னேறி விட்டார்கள் என்று நினைப்பதும் உண்மையல்ல. அரசியலில் நல்ல பணிகளை செய்பவர்கள் வாக்குகளை கோர வேண்டியதில்லை. இயற்கையாகவே அவர்களுக்கு ஓட்டுகள் விழும். பிரதமர் மோடி தனது சாதி பற்றி எப்போதுமே பேசியதில்லை. இதற்காக உண்மையிலேயே அவரை பாராட்டுகிறேன். அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.

Advertising
Advertising

சொந்த முயற்சியால் பெரிய தலைவர்கள் ஆனவர்கள் தங்கள் சாதியை எப்போதுமே சொன்னதில்லை. எனவே அதுபோன்ற தலைவர்களை உருவாக்க நாம் முயற்சிக்க வேண்டும். அவர்களால்தான் நாட்டையும் மாநிலங்களையும் வெற்றிகரமாக வழிநடத்தி பொருளாதார நிலையை உயர்த்த முடியும். தாங்கள் செய்த பணியின் அடிப்படையில் தேர்தல் டிக்கெட் பெற தவறியவர்கள்தான் சாதி பிரச்னையை எழுப்புகிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் எந்த சாதியைச் சேர்ந்தவர்? அவர் ஒரு கிறிஸ்தவர். எந்த சாதியையும் சேர்ந்தவர் அல்ல. அதேபோல இந்திரா காந்தி சாதியை வைத்தா பிரதமர் ஆனார்?

பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சிலர் என்னிடம் சொன்னார்கள். ஆமாம் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்தான். ஆனால் நான் உடனடியாக அவர்களிடம் கேட்டது, இந்திரா காந்தி இடஒதுக்கீட்டில் வந்தாரா என்பதுதான். பல ஆண்டுகள் அவர் நாட்டை ஆண்டு பிரபலமானார். அதைப் போலவே பாஜ தலைவர்களான வசுந்தரா ராஜே மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இடஒதுக்கீட்டிலா வந்தார்கள்? இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

Related Stories: