×

டெல்டாவில் கனமழை வெளுத்து கட்டியது: பூதலூர், திருமானூரில் சதமடித்தது

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பூதலூரில் 126.8 மி.மீ, திருமானூரில் 115.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.திருவையாறில் 74 மி.மீ மழை பெய்துள்ளது. கனமழையால் டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீடித்து வரும் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்து வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நாகையில் நேற்றிரவு 9.30 மணி முதல் 10 மணி வரை இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது. வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, கீழ்வேளூர், செம்பனார்கோவில், பூம்புகார், தரங்கம்பாடி, கொள்ளிடம், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிரவு பலத்த மழை கொட்டியது. ஆனால் மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்றிரவு 10 மணி முதுல் நள்ளிரவு வரை மழை பெய்தது. முத்துப்பேட்டையில் இரவு 9.30 மணி முதல் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. பின்னர் விடிய விடிய சாரல் மழை பெய்தது. மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான் பகுதிகளிலும் இரவு மழை பெய்தது.

தஞ்சையில் நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில், தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் உள்ள கோயில்கள், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. திருவையாறில் நேற்றிரவு 74 மி.மீ மழை கொட்டியது. பாபநாசத்தில் கொட்டிய மழையால் சீனிவாச பெருமாள் கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது. பட்டுக்கோட்டை, கும்பகோணம், ஒரத்தநாடு பகுதிகளிலும் மழை கொட்டியது. தாராசுரம் கடைத்தெருவில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.திருச்சி மாநகரில் நேற்று மாலை முதல் இரவு 8 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நகரின் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. மணப்பாறை, துவரங்குறிச்சி, தோமைலை, குளித்தலை, முசிறி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் நேற்றிரவு 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி மிதமான மழை பெய்தது.

குளித்தலை பகுதியில் மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை பெய்த கனமழையால் குளித்தலை திருச்சி மெயின் ரோட்டில் சண்முகானந்தா தியேட்டரில் அருகே வாய்க்கால் ஓரம் அரசமரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த பிள்ளையார் கோவில் தெரு சேதமடைந்தது. தொடர் மழையால் குளம் குட்டைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. குளித்தலை பகுதியில் 5ஆயிரம் ஏக்கரில் கரும்பு நெல், வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர், செட்டிக்குளம், ஆலத்தூர் கேட், பாடாலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்றிரவு மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்றிரவு மழை பெய்தது. அரியலூர் மாவட்டம் திருமானூரில் மிக அதிகமாக 115.4, மி.மீ , தஞ்சை மாவட்டம் பூதலூரில் 126.8 மி.மீ மழை பதிவானது. ததிருச்சி கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றுமாலை முதல் நள்ளிரவு வரை மழை பெய்தது. குளிர் காற்று வீசியது. இதனால் தாழ்வான
இடங்களில் மழை நீர் தேங்கியது.

டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு :

மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம், விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, 17 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. அதேபோல், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு 18 ஆயிரம் கனஅடியில் இருந்து, 16,750 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி.

Tags : Bodhalur Delta in Heavy Rain , Delta, Heavy Rain, Poodalur, Thirumanur
× RELATED புதுக்கோட்டை அருகே பட்டியலின மக்கள்...