×

பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம்: ஜாமினில் வெளிவர முடியாத 308 பிரிவில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு

சென்னை: பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது 308 பிரிவின் கீழ் பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல் பிரிவின் கீழ் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் ஜெயகோபால் உறவினர் மேகநாதன் பெயரையும் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் சேர்த்துள்ளது. ஜெய்கோபால் மீது இதுவரை 279, 304(ஏ), 336 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் உறுதியானால் 308 பிரிவின் கீழ் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 12ம் தேதி மாலை 3 மணியளவில் சுபஸ்ரீ என்பவர் ஸ்கூட்டரில் துரைப்பாக்கம் - குரோம்பேட்டை 200 அடி ரேடியல் சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

பள்ளிக்கரணை அருகே வந்தபோது ரேடியல் சாலையில் சென்டர் மீடியனில் வைக்கப்பட்டிருந்த பள்ளிக்கரணை அதிமுக பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு பேனர் ஒன்று எதிர்பாராதவிதமாக கழன்று அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த சுபஸ்ரீயை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் விதிமீறி பேனர் வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

இதையடுத்து, விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பீகாரை சேர்ந்த லாரி டிரைவர் மனோஜ் (25) என்பவரை கைது செய்தனர். மேலும், பேனர் அச்சிட்டு தந்ததாக கோவிலம்பாக்கம், விநாயகபுரத்தில் உள்ள அச்சகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நிலையில் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி டிரைவர் மனோஜ் முதல் குற்றவாளியாகவும், 2வது குற்றவாளியாக அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை சேர்த்தனர். லாரி ஓட்டுநர் மற்றும் பேனர் வைத்தவர் எனப் பொதுவாகக் குறிப்பிட்டு 279, 336, 304(A) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது, அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் மீது ஜாமினில் வெளிவர முடியாத 308 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : teenager ,Jayagopal ,Banerjee ,Bureau of Investigation ,Jayakopal AIADMK ,The Teenager , Athimukha Jayagopal, Case Record, Parangimalai Police, Banner, Subasree Death
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...