×

அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டம் திருமானூரில் 11சென்டி மீ ட்டர் மழை பதிவாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் 9 சென்டி மீட்டர், திருவையாறு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் அருப்புக்கோட்டை, திருச்சுழி, செங்கம், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னையைப்பொறுத்தவரை மாலை அல்லது இரவில் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே சென்னையில் பல இடங்களில் இன்று காலையில் லேசாக மழை தூறியது.

Tags : Thundershowers ,districts ,Chennai Meteorological Department Thundershowers ,North Tamil Nadu , Thundershowers, six districts,North Tamil Nadu,next 24 hours,Chennai Meteorological department
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை