×

கொள்ளிடத்தில் வீணாகும் தண்ணீரை அறந்தாங்கி குளங்களில் நிரப்ப வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

அறந்தாங்கி: கொள்ளிடத்தில் வீணாக திறந்துவிடப்படும் தண்ணீரை குடிநீர் குழாய்கள் மூலம் அறந்தாங்கியில் உள்ள குளங்களில் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் காவிரி பாசனம் நடைபெறும் மாவட்டங்களாகும். கர்நாடகா தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய நீரை தர மறுப்பதும், பின்னர் வௌ்ளப்பெருக்கு ஏற்படும்போது, தண்ணீரை பல ஆயிரம் கனஅடி திறந்துவிடுவதும் வாடிக்கையாகி விட்டது.

தமிழகத்தில் சம்பா சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்து தாமதமாக அணை திறக்கப்படுகிறது. இந்த ஆண்டும் கர்நாடகாவில் இருந்து வந்த திடீர் வௌ்ளத்தால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பியதால், அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் விவசாயத்திற்கு தேவையான 25 ஆயிரம் கனஅடிக்கு பதிலாக வெறும் 10 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாயில் வெறும் ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சேரவில்லை. அப்போது புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து, அந்த தண்ணீரை 168 ஏரிகளில் இருப்பு வைக்குமாறு பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் பொதுப்பணித்துறையினர் மெத்தனமாக இருந்துவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால், கல்லணைக்கு 25 ஆயிரம் கனஅடி திறந்த பொதுப்பணித்துறையினர், அணையின் பாதுகாப்பு கருதி கொள்ளிடத்தில் உபரி நீர் என்ற பெயரில் சுமார் 37 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்தனர்.

கல்லணைக் கால்வாயில் இருந்து 4500 கனஅடி தண்ணீர் திறப்பதற்கு பதிலாக 2500 கனஅடி திறப்பதால், அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்க வேண்டியிருப்பதால், பொதுப்பணித்துறையினர் முறை பாசனத்தை தொடங்கி உள்ளனர். இதனால் எந்த ஒரு பகுதிக்கும் முழுமையாக தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளுக்கு பாசனத்திற்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நிலையில், பல டி.எம்.சி தண்ணீரை உபரி நீர் என்ற பெயரில் கடலுக்கு பொதுப்பணித் துறையினர் கொள்ளிடம் மூலம் அனுப்பி வருகின்றனர். இவ்வாறு கடலுக்கு அனுப்பும் தண்ணீரை காவிரியில் இருந்து குடிநீர் விநியோகம் நடைபெறும் குழாய்கள் மூலம் 24 மணி நேரமும் காவிரி நீரை அனுப்பினால், அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் சேமிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் உள்ள பல குளங்கள் சமூக நல அமைப்புகளால் துhர்வாரப்பட்டுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், தண்ணீரின்றி வறண்டு போய் உள்ளன. அறந்தாங்கி பகுதிக்கு தற்போது திருக்காட்டுப்பள்ளியில் இருந்து குழாய்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு குடிநீர் வந்து கொண்டுள்ளது.

தற்போது காவிரி நீர் கரை புரண்டு ஓடும் நிலையில்(உபரிநீர் கொள்ளிடத்தில் வெளியேற்றப்படும் காலங்களில் மட்டும்)கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் 24 மணி நேரமும் தண்ணீர் அனுப்பினால், அறந்தாங்கி நகரில் உள்ள குளங்களை நிரப்ப முடியும். அவ்வாறு குளங்களில் நிரப்பினால், அறந்தாங்கி நகரில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, மக்கள் குளிப்பதற்கு இந்த குளங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுப்பதும் குறையும். இதுகுறித்து சமூக ஆர்வலர் க்ரீன்முகமது கூறியது: கொள்ளிடத்தில் உபரி நீர் வெளியேற்றும் காலங்களில் மட்டும் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் கூட்டுக்குடிநீPர் திட்ட குழாய்களில் 24 மணி நேரமும் காவிரி நீரை அனுப்பினால்,நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகங்களின் கீழ் உள்ள குளங்களில் தண்ணீரை சேமித்து வைக்க வாய்ப்பாக இருக்கும். அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் குளத்தில் மக்கள் அன்றாடம் குளிப்பது வழக்கம். தற்போது அந்த குளத்தில் தண்ணீர் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

அதனால் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் காவிரி நீரை அனுப்பினால், வீரமாகாளியம்மன் குளத்தில் தண்ணீரை சேமிக்கலாம். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தால், கடலுக்கு வீணாகச் செல்லும் தண்ணீரை குளங்களில் தேக்கிவைக்கலாம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, மக்களின் பயன்பாட்டிற்கும் உதவும். இவ்வாறு அவர் கூறினார். காவிரி நீரை தற்போது பயன்பாட்டில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் அனுப்புவதற்கு பெரிய அளவில் திட்டடமிடல் தேவையில்லை. சிறிய அளவில் மாற்றங்கள் செய்தாலே போதும், மேலும் தண்ணீரை அனுப்ப கூடுதலாக மின்சக்தி மட்டுமே செலவாகும். அதை பொதுப்பணித்துறையினர் உள்ளாட்சி அமைப்புகளிடமே பெற்;றுக் கொள்ளலாம். எனவே தமிழக அரசு கடலில் வீணாகும் காவிரி நீரை கூட்டுக்குடிநீர் திட்டக்குழாய்கள் மூலம் குளங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Aranthangi , Aranthangi, kollidam
× RELATED கடத்தப்பட்ட அரசு பஸ் விபத்தில் சிக்கியது