×

கர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்

டெல்லி: தகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகியதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கர்நாடகாவில், கட்சித் தாவல் தடை 17 எம்எல்ஏ.க்களின் பதவியை பறித்து, காங்கிரஸ்-மஜத ஆட்சியின்போது அப்போதைய சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் நடவடிக்கை எடுத்தார். அவர்கள் வரும் 2023ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட தடை விதித்ததுடன், அரசு பதவிகள் வகிப்பதற்கும் தடை விதித்தார். சபாநாயகரின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிலுவையில் உள்ளது.

தாங்கள் தாக்கல் செய்துள்ள மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரணை நடத்தும்படி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் 5 முறை உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டும் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், மனுக்களை வழக்கு பட்டியலில் சேர்க்கும்படி பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று வழக்கு பட்டியலில் சேர்த்துள்ள பதிவாளர் செப்டம்பர் 11ம் தேதி நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அமர்வு முன் விசாரணை நடைபெறும் தெரிவித்தார். ஆனால், அன்று விசாரணையை ரத்து செய்துவிட்டு 16ம் தேதி (நேற்று) விசாரணை நடத்துவதாக நீதிமன்ற இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டது.

ஆனால், நேற்றும் வழக்கு விசாரணைக்கு வரவில்லை. இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி மோகன் சந்தானகவுடர் இன்று திடீரென விலகி உள்ளார். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 23ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.


Tags : Karnataka , MLAs case to remove Karnataka eligibility, Supreme Court judge, quit
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...