ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த சம்பவம்: 12 சடலங்கள் மீக்கப்பட்ட நிலையில் மேலும் 4 பேர் உடல்கள் மீட்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மேலும் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தேவிபட்டனம் கண்டி போச்சம்மா கோவிலுக்கு படகு சவாரி இயக்கப்பட்டது. ஆற்றில் 61 பேரை ஏற்றிய படகு கச்சளூரு பகுதியில் வரும் போது பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதில் பயணித்தவர்கள் பலர் பாதுகாப்பு உடைகள் இல்லாதால் தண்ணீரில் மூழ்கினர். விபத்து நடந்த படகில் 11 ஊழியர்கள் உள்பட 61 பேர் பயணித்தனர். தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த தலா 30 பேர் இரண்டு அணிகளாக விரைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் இந்த விபத்தில் சிக்கியவர்களில் 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் இதுவரை, 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதையடுத்து எஞ்சியவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடற்படை ஹெலிகாப்டரும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், யாரேனும் உயிருடன் மீட்கப்படுவார்களா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.

கிழக்கு கோதாவரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்டுள்ள விபத்தால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிராத்திப்பதாவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விபத்தினை தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசம் முழுவதும் படகு சேவைகளை உடனடியாக நிறுத்த அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக ஏஎன்ஐ அதிகாரிகள் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டன. விபத்து நடந்த இடத்திற்கு அமைச்சர்கள் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிடுமாறும், மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழக்கப்படும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Related Stories: