நடந்தாய் வாழி காவேரி திட்டம் காவிரி மாசுபடுவதை தடுக்க அறிக்கை தயாரிக்க 16 பேர் குழு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கர்நாடக மாநிலம் குடகுமலையில் தலைக்காவிரியாக பிறந்து, தமிழகத்தின் தஞ்சை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் வழியாக சுமார் 800 கி.மீ தூரம் பயணித்து இறுதியாக பூம்புகாரில் வங்ககடலில் கலக்கிறது. இந்த காவிரியின் மூலம் 12 மாவட்டங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் பாசன பயன்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

காவிரி ஆறு மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க, “நடந்தாய் வாழி காவேரி” என்ற திட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதேபோன்று பவானி, வைகை, அமராவதி மற்றும் தாமிரபரணி ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் தலைவராகவும், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் உறுப்பினர் செயலாளராகவும், பொதுப்பணித்துறை சிறப்பு செயலாளர், நிதித்துறை இணை செயலாளர், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர், திருச்சி, கோவை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர், திருச்சி சுற்றுச்சூழல் பிரிவு கண்காணிப்பு பொறியாளர், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல்துறை இணை ஆணையர், தமிழ்நாடு நீர்வளத்துறை மேம்பாட்டு குழுமம் தலைவர், துணை தலைவர், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர், வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை கூடுதல் முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வாரிய இணை மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு நீர் முதலீட்டு கம்பெனி தொழில்நுட்ப நபர், வருவாய் நிர்வாகத்துறை இணை ஆணையர், வனத்துறை கூடுதல் முதன்மை வன பாதுகாப்பாளர் ஆகியோர் உறுப்பினராக கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  

இதேபோன்று பவானி, வைகை, அமராவதி மற்றும் தாமிரபரணி ஆறுகள் மாசுபடுவதை தடுக்க இக்குழு மூலம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக காவிரி ஆறு முழுமையாக மாசுபடுவதில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் இக்குழு அறிக்கை தயாரிக்கும் தனியார் நிறுவனங்களை தேர்வு செய்கிறது. அந்த நிறுவனங்கள் மூலம் நடைபெறும் பணிகளை இக்குழு கண்காணிக்கும். தற்போது ரூ.9,900 கோடி இப்பணிக்கான தோராய மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்த பிறகே எவ்வளவு செலவாகும் என்பது தெரியவரும்.  தமிழ்நாட்டில் நீர் வளம் பாதுகாக்கப்பட்டு நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரி ெதரிவித்தார். 

Related Stories: