×

650 கோடி மதிப்பில் நீர்வள, நிலவள திட்டப்பணிகளை தொடங்காதது ஏன்? உலக வங்கி குழு சரமாரி கேள்வி ,..பொறியாளர்கள் அதிர்ச்சி

சென்னை: உலக வங்கி ஒப்புதல் அளித்தும் 650 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்காதது ஏன் என்று உலக வங்கி குழு சரமாரியாக கேள்வி எழுப்பியது. இது, பொறியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் மூலம் பாசன உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளது. 2962 கோடி செலவில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 7 ஆண்டுகள் 4 கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், 4778 ஏரிகள், 477 அணைகட்டுகளை புனரமைத்தல், தடுப்பணை கட்டுதல், பாசன வாய்க்கால்களை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக 743 கோடி செலவில் 1325 ஏரிகள், 107 அணைக்கட்டுகள், 45 செயற்கை முறை நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து, பணிகள் நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக ஆய்வு செய்ய உலக வங்கி அதிகாரி குமுதினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு தமிழகம் வந்துள்ளது. இக்குழுவினர் வரும் 20ம் தேதி வரை உலக வங்கி நிதியுதவியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில், நேற்று உலக வங்கி குழுவினர் நீர்வள, நிலவள திட்ட இயக்குனர் விபு நய்யார், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, முதற்கட்ட பணிகளில் முடிப்பதில் தாமதம் ஏன் என்பது தொடர்பாக உலக வங்கி குழுவினர் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 18 மாவட்டங்களில் 1200 ஏரிகள் புனரமைப்பு பணிகளுக்கு உலக வங்கி ஒப்புதல் கொடுத்தும் தொடங்குவதில் தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பினர்.  அப்போது நிதி ஒதுக்கீடு, டெண்டர் விடுவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் தான் பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடித்து விடுவோம். அடுத்த ஆண்டு ஜனவரியில் முதற்கட்ட பணிகளை தொடங்கி விடுவோம் என்றனர். மேலும், தற்போது நடந்து வரும் பணிகள் முழுமையாக முடிந்தால் மட்டுமே நிதி ஒதுக்கீடு தரப்படும். வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஆய்வுக்கு வருவோம் என்று அதிகாரிகளிடம் உலக வங்கி குழுவினர் தெரிவித்து விட்டனர்.

Tags : land ,World Bank Group , Hydrology, Landscape, Engineers
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!