ப.சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்: நாளை ஆஜராக அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உதவியாளர் கே.வி.பெருமாளை நாளை நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 19ம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது அவரது உதவியாளராக இருந்த கே.வி.பெருமாளை சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். கடந்த 10ம் தேதி அவரது வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். சிபிஐ விசாரித்துள்ள நிலையில் தற்போது கே.வி.பெருமாளுக்கு அமலாக்கத்துறையும் நேற்று சம்மன் அனுப்பி உள்ளது. அதில், “நாளை டெல்லி லோக்நாயக் பவனில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: