×

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் 230 தீவிரவாதிகள் காத்திருப்பு: பாதுகாப்பு பற்றி அமித்ஷா ஆய்வு

புதுடெல்லி: காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் 5ம் தேதி ரத்து செய்தது. இதனால் கடும் கோபத்தில் உள்ள பாகிஸ்தான், இந்தியா குறித்து ஐநா உட்பட சர்வதேச அமைப்புகளிடம் புகார் அளித்து வருகிறது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என பல நாடுகளும் கூறியதால், பாகிஸ்தான் அதிருப்தி அடைந்துள்ளது. இந்நிலையில், காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க, தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் மீண்டும் இறங்கியுள்ளது. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களில், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் மற்றும் அல்பதர் அமைப்பு தீவிரவாதிகள் 230 பேர் முகாமிட்டுள்ளனர் என உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இவர்களை காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மற்றும் ஜம்மு பகுதிக்குள் ஊடுருவ செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இதனால் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. இந்நிலையில், காஷ்மீர் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீர் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நிலவும் பாதுகாப்பு நிலவரம் குறித்து அமித்ஷாவுக்கு விரிவாக விளக்கப்பட்டது.

காஷ்மீர் ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின், அங்கு 43வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக், பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து அவர் பிரதமரிடம் விளக்கினார் என கூறப்படுகிறது.


Tags : militants ,Kashmir ,Pakistani ,Amit Shah , Pakistan, Kashmir, 230 militants waiting, Amit Shah
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி