வி.ஐ.டி. பல்கலைக்கழக விழா மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் 2ம் இடம்: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

சென்னை:  சென்னையில் வி.ஐ.டி. பல்கலைக் கழக விழாவில், இந்தியாவில், மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் 2வது மாநிலமாக விளங்குவதாக தமிழக கவர்னர்  பன்வாரிலால் புரோகித் பேசினார். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் இந்திய பொருளாதார சங்கம், தமிழக பொருளாதார சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் வரவேற்றார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் முன்னிலை வகித்தார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து மாநாட்டு மலரை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. மேலும், தமிழ்நாடு பன்முகப்படுத்தப்பட்ட உற்பத்தித் துறையைக் கொண்டுள்ளது. ஆட்டோமொபைல், உதிரி பாகங்கள், பொறியியல் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஆடைகள் போன்ற தொழில்களில் தமிழகமே முன்னணியில் உள்ளது.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தென்னிந்தியாவின் பங்கு 50 சதவீதமாக உள்ளது. முதலீட்டை எளிதாக்குவதற்காக ஒற்றை சாளர முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் வணிகத்தை எளிதாக்குவதில் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. டிஜிட்டல் சேவைகள் மற்றும் தகவல்களை அணுக ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கத்தை உணர தமிழகம் ஆர்வமாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள மென்பொருள் பூங்காக்கள் மூலம் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில் வல்லுனர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தில் மட்டும் 1,900 கல்லூரிகள், 2 மத்திய மற்றும் 22 மாநில பல்கலைக்கழகங்கள், 556 தொழில் பயிற்சி நிறுவனங்கள், 509 பாலிடெக்னிக் நிறுவனங்கள், 29 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு.

இதன் மூலம், இந்தியாவின் சுகாதாரத் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவிற்கு வரும் சுகாதார சுற்றுலாப் பயணிகளில் 45 சதவீதத்தை தமிழ்நாடு ஈர்க்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பொருளாதாரத்திற்கு தமிழக அளவில் சிறப்பான சேவை புரிந்த 7 பொருளாதார நிபுணர்களுக்கு விருது வழங்கப்பட்டது. முடிவில், தமிழ்நாடு பொருளாதார சங்கத்தின் பொருளாளர் வீரமணி நன்றி கூறினார். தமிழகத்தில் உள்ள மென்பொருள் பூங்காக் கள் மூலம் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் வல்லுனர்கள், வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

Related Stories: