×

நகராட்சி ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஏட்டுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

* எஸ்.ஐ.க்கு பதவி உயர்வு வழங்ககூடாது
* மனித உரிமை ஆணையம் உத்தரவு
சென்னை: நகராட்சி ஊழியர் தாக்கப்பட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுக்கு ₹5 லட்சம் அபராதம் விதித்தும், சப்-இன்ஸ்பெக்டர் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபடுவதால் பதவி உயர்வு வழங்ககூடாது என்றும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், விழுப்புரம் நகராட்சியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில்: கடந்த 2008ம் ஆண்டு என் மீதான ஒரு புகார் சம்பந்தமாக அப்போதைய விழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் குமார் என்பவர் என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். அப்போது கர்ப்பிணியான என்னுடைய மனைவி தடுக்க முயன்ற போது அவர் கீழே தள்ளிவிட்டு என்னை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மணி, சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு ராமலிங்கம் ஆகியோர் என்னை கடுமையாக தாக்கினர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை நடத்திய நீதிபதி சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் மணி உள்பட 3 பேரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது. இதற்காக அவர்கள் 3 பேருக்கும் சேர்த்து ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும். இந்த தொகையில் தலா ₹2 லட்சத்தை இன்ஸ்பெக்டர் மணி, சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோரிடம் இருந்தும், ₹1 லட்சத்தை ஏட்டு ராமலிங்கத்திடம் இருந்தும் வசூலித்து கொள்ளலாம். இன்ஸ்பெக்டர் மணி உள்பட 3 பேர் மீதும் கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சப்-இன்ஸ்பெக்டர் குமார் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபடுவதால் அவருக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.

Tags : Inspector ,Sub-Inspector , Municipal Employee, Attacked, Inspector, Sub-Inspector ,fined, Rs 5 lakh
× RELATED ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது