விதிமுறைகள் பின்பற்றாமல் அபராதம் உயர்வு மத்திய அரசு போக்குவரத்து சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும்: கேரளா வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: எந்த விதிமுறையும் பின்பற்றாமல் அபராத தொகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் தான் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதை புரிந்துகொண்டு மத்திய அரசு போக்குவரத்து சட்டத்தில் மற்றம் கொண்டுவரவேண்டும் என்று கேரள போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்திரன் தெரிவித்தார். போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை மத்திய அரசு சமீபத்தில் பலமடங்கு உயர்த்தியது. இதற்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் பாஜ மாநிலங்களே இந்த அபராதத்தை குறைத்தும், நிறுத்தியும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கேரளாவில் உயர்த்தப்பட்ட அபராத தொகை வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க நேற்று திருவனந்தபுரத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்திரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு கூட்டப்பட்ட அபராத தொகையை வசூலிப்பது தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்திரன் கூறுகையில், ‘‘உயர்த்தப்பட்ட அபராத தொகையை வசூலிப்பதை தற்போதைக்கு நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஓண கொண்டாட்டங்கள் முடியும்வரை மோட்டார் போக்குவரத்து துறையோ போலீசாரோ எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முதல்வர் பினராய் விஜயன் அறிவித்திருந்தார்.

தற்போது ஓணம் பண்டிகை முடிந்து விட்டதால் அதே நிலை தொடர வேண்டுமா என்பது குறித்து முதல்வரிடம் ஆலோசனை கேட்கப்படும். காலத்திற்கு ஏற்ப அபராத தொகையை அதிகரிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தற்போது எந்த விதிமுறையும் பின்பற்றாமல் அபராத தொகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் தான் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதை புரிந்துகொண்டு மத்திய அரசு சட்டத்தில் மற்றம் கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

Related Stories: