×

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் நிதியை அம்மா உணவகத்துக்கு ஒதுக்குவதை எதிர்த்து வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கட்டிட தொழிலாளர்கள் நல வாரிய நிதியை, அம்மா உணவகத்துக்கு பயன்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் தலைவர் பொன்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  கட்டிட தொழிலாளர் நலனுக்காக கடந்த 1994ம் ஆண்டு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம்  அமைக்கப்பட்டது. கட்டிடங்கள் கட்ட ஆகும் செலவில் ஒரு சதவீத தொகை வரியாக வசூலிக்கப்பட்டு, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த அடிப்படையில் வாரியத்தில் கணக்கில் தற்போது ரூ. 3 ஆயிரம் கோடி இருப்பு உள்ளது. இந்த நிதி மூலம் கட்டிட தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், பிரசவ கால மருத்துவ நிதி ஆகிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
 இந்த நிதியில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்குமிடங்கள் கட்டுவதற்காக ரூ.31.65 கோடியை அரசு பயன்படுத்தியுள்ளது. வாரியத்தின் நிதியை அம்மா உணவகத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

 நலவாரியத்தின் கீழ் சொற்ப தொகையே கட்டிட தொழிலாளர்களுக்கு உதவியாக வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டுள்ள காப்பகத்தினால் கட்டிட தொழிலாளர்களுக்கு எந்த பயனும் இல்லை. பதிவு செய்யப்பட்ட கட்டிட தொழிலாளர்களுக்கு, அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் வகையில் தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் 2 அரசாணைகளை பிறப்பித்தது.  அந்த அரசாணையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுக்கு,  நல வாரியத்தின் நிதியிலிருந்து அம்மா உணவகத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் நிதியை அம்மா உணவகத்திற்கு ஒதுக்கும் அரசாணைகளுக்கு தடை விதித்து, அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

 இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் ரிச்சர்ட்சன் வில்சன் ஆஜராகி, அம்மா உணவகம் அனைத்து இடங்களிலும் நஷ்டத்தில் நடத்தப்படுகின்றன. அம்மா உணவகத்திற்கு வாங்கும் பொருட்களுக்கு பணம் தருவதற்காக நிதி இல்லை. இதை சமாளிக்க கட்டிட தொழிலாளர்கள் நல வாரிய தொழிலாளர்களுக்கு இலவச உணவு தருவதாக நிதியை வாரியத்திலிருந்து நிதியை எடுக்க முடிவு செய்துள்ளார்கள் என்று வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசும், தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியமும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

Tags : High Court ,construction workers ,welfare board , Case against, construction workers' ,welfare board to mother restaurant,High Court order responding
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...