கச்சா எண்ணெய் விலை உயர்வு ஈரானுக்கு டிரம்ப் மறைமுக போர் எச்சரிக்கை: பதிலடி கொடுக்க ராணுவம் தயார்

லண்டன்: சவுதி அரேபியா எண்ணெய் வயல்கள் மீதான ஆளில்லா விமான  (டிரோன்) தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்க அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாக  அதிபர் டிரம்ப், ஈரானுக்கு மறைமுக எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில், ஷன்னி பிரிவைச்  சேர்ந்த அதிபர் ஆதரவு படைக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி  கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்  போர் நீடித்து வருகிறது. இதில், அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி  அரேபியாவும் ஹவுதி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில்,  சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய்  சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அப்காய்க், குரைஸ் பகுதிகளிலுள்ள எண்ணெய்  வயல்கள் மீது டிரோன்கள் மூலம் கடந்த சனிக்கிழமை தாக்குதல்  நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சிப் படை பொறுப்பேற்றது.

இதனால் சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. நாள்  ஒன்றுக்கு 57 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் கச்சா எண்ணெய் விலையில் ஒரு பேரலுக்கு ஏறக்குறைய 20 சதவீதம்  உயர்ந்து, 12 அமெரிக்க டாலர் கூடுதலாக விற்பனையானது.  இந்நிலையில் டிரம்ப் நேற்று தனது டிவிட்டர் பதிவில், `‘சவுதி எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியும்.  எக்காரணத்திற்காக யார் தாக்குதல் நடத்தியது என்று சவுதி  அரசு உறுதிப்படுத்தியதும், அந்நாடு மீது தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்க  ராணுவம் தயாராக உள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த  ஈரான் வெளியுறவு அமைச்சர் அபாஸ் மவுசவி, கண்ணை மூடிக் கொண்டு கூறும் இந்த  குற்றச்சாட்டுகளால் எந்த பலனும் இல்லை. இது போன்ற சர்ச்சைக்குரிய  குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை, புரிந்து கொள்ள முடியாதவை’’ என  கூறியுள்ளார்.

இதுகுறித்து சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்  கூறுகையில், இந்த விவகாரத்தில் ஈரானுடனான மோதலை சவுதி அரசு விரும்பவில்லை. அதே  சமயம், இதற்கு பதிலடி கொடுக்க நினைக்கிறது.  அதற்காக ஈரான் எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதில்லை’’  என்று தெரிவித்தார். இதன் காரணமாக வளைகுடா பகுதியில்  அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தொடங்கும் பதற்றம் மேலும்  வலுவடைந்துள்ளது. இதனிடையே, `அமெரிக்காவும் ஈரானும் கட்டுப்பாட்டை இழக்க  வேண்டாம்’ என்று சீனா வலியுறுத்தி உள்ளது.

Related Stories: