காஷ்மீரில் இயல்பு நிலை விரைவில் திரும்ப மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு: தேவைப்பட்டால் நானே நேரில் செல்வேன் தலைமை நீதிபதி அறிவிப்பால் பரபரப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், எம்பியுமான பரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. ‘காஷ்மீர் நிலைமையை அறிய, தேவைப்பட்டால் நானே நேரில் செல்வேன்’ என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறி பரபரப்பை  ஏற்படுத்தினார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது அரசியல் சட்டத்தை ரத்து செய்த பிறகு, அங்கு அரசுக்கு எதிராக போராட்டம் வெடிக்கலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா உட்பட பல முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்திய அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த வாரம் ஆட்கொணர்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வைகோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல் கான் தனது வாதத்தில், “காஷ்மீரில் 370வது சட்டத்தை ரத்து செய்த பிறகு அந்த மாநிலத்தில் முன்னாள் முதல்வரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை’’ என வாதிட்டார். மத்திய அரசு தரப்பு வாதத்தில், “உச்ச நீதிமன்றத்தில் வைகோ தரப்பில் மனுத் தாக்கல் செய்ய எந்த முகாந்திரம் கிடையாது. ஏனெனில் பரூக் அப்துல்லாவின் மகள் காஷ்மீர் மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்’’ என்றார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி உத்தரவில் கூறியதாவது: காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பருக் அப்துல்லாவை கண்டுபிடித்து தாருங்கள் என வைகோ தொடர்ந்துள்ள ஆட்கொணர்வு மனுவிற்கு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.  நானே செல்வேன்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பொருத்தவரையில் அங்குள்ள உயர் நீதிமன்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அது எந்த அளவிற்கு உண்மை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அங்கு இருக்கும் தற்போதைய முழு நிலையை ஒரு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வலியுறுத்தப்படுகிறது.

இதில் நிலைமை மோசமானதாக இருக்கும்பட்சத்தில், தேவைப்பட்டால் அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள நானே நேரடியாக அங்கு செல்ல நேரிடும். இவ்வாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடும் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

மேலும், காஷ்மீர் பகுதியில் விரைவில் இயல்பு நிலை திரும்புவதையும், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவை முழுமையாக இயங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதையும் உறுதிப்படுத்துங்கள் என மத்திய அரசுக்கு வலியுறுத்திய நீதிபதிகள் வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதேபோல் காஷ்மீர் மாநிலத்தில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி உட்பட தாக்கல் செய்துள்ள மொத்தம் ஒன்பது மனுக்களும் அன்றைய தினம் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அவையில் பொய் சொன்ன அமித்ஷா’

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் முகமது சலீம் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘பரூக் அப்துல்லா அவரது சொந்த விருப்பத்தின் பேரில் மக்களவைக்கு வரவில்லை என அவையில் அமித்ஷா பொய் கூறினார். ஆனால், அவர் கடந்த மாதம் 4ம் தேதி முதல் காவலில் உள்ளார் என்பதை நாம் இப்போது அறிகிறோம். உள்துறை அமைச்சரிடம் நம்பகத்தன்மை உள்ளதா?’’ என குறிப்பிட்டுள்ளார்.

குலாம் நபிக்கு அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உச்ச நீதிமன்றத்தில் காஷ்மீர் செல்ல அனுமதி கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர் காஷ்மீர் செல்ல அனுமதி வழங்கி உள்ளது. உத்தரவில், “நகர், பாரமுல்லா அனந்த்நாக் மற்றும் ஜம்மு ஆகிய பகுதிகளுக்கு குலாம் நபி ஆசாத் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் அவர் எந்த ஒரு பொதுக்கூட்டமும் நடத்தவோ அல்லது மக்களிடம் ஏதேனும் அரசியல் பிரசாரங்களை மேற்கொள்ளவோ கூடாது’’ என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பரூக் அப்துல்லா வீடு சிறையாக அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா(81), பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம்(பிஎஸ்ஏ) என்ற கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சட்டத்தின் கீழ் அவரை விசாரணையின்றி 6 மாதம் சிறை வைத்திருக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த மாதம் 5ம் தேதி முதல் வீட்டுக் காவலில் உள்ளார். நகர் குப்கர் சாலையில் உள்ள அவரது வீடு, அரசு உத்தரவு மூலம் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கண்டனம்

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் அளித்த பேட்டியில், ‘‘பிஎஸ்ஏ சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பழமையான கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டது துரதிர்ஷ்டம். காஷ்மீரின் ஒவ்வொரு முதல்வரும், தீவிரவாதத்துக்கு எதிராக போராடியுள்ளனர். காஷ்மீரில் தற்போது தீவிரவாதம் இல்லாமல் இருப்பதற்கு, காஷ்மீரின் அரசியல் கட்சிகள்தான் காரணம். பா.ஜ அல்ல. தீவிரவாதத்துக்கு எதிராகவும், நாட்டின் ஒற்றுமைக்காகவும் பாடுபட்ட தலைவர்களை சிறை வைப்பது, இந்த நாட்டின் துரஅதிர்ஷ்டம்’’ என கூறியுள்ளார்.

Related Stories: