ஈரோடு நடமாடும் விரைவு நீதிமன்றம் உத்தரவு: குடிபோதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு 15,000 அபராதம்

ஈரோடு: புதிய மோட்டார் வாகன சட்டப்படி ஈரோட்டில் குடிபோதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு 15 ஆயிரம் அபராதம் விதித்து ஈரோடு நடமாடும் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. மோட்டார் வாகன திருத்த சட்டம் 2019ன் படி சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிக அபராத தொகை நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.  அதன்படி, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் அபராதமும், ஏற்கனவே  தண்டனை விதிக்கப்பட்டு வாகனம் ஓட்டுவதற்கு தகுதியிழந்தவர்கள் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.  அதேபோல், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது முதல் தடவை கண்டறியப்பட்டால் ₹ 10ஆயிரம் அபராதமும் அல்லது 6 மாத சிறை தண்டனையும், 2வது தடவை கண்டறியப்பட்டால் 15 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

 ஈரோடு மாவட்டத்தில் இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டு, போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு டவுன் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த ஈரோடு பி.பெ. அக்ரஹாரம் ஜோசப் தோட்டம் பகுதியை சேர்ந்த ராஜா (27) என்பவரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அவர் குடிபோதையில் இருந்ததும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கினை ஈரோடு நடமாடும் விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி விசாரித்து, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கு ₹10 ஆயிரமும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டியதற்கு 5 ஆயிரமும் என மொத்தம் 15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதேபோல், கால் டாக்சி ஓட்டுநர், பைக் ஓட்டுநர் என 2 பேருக்கும் தலா 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: