புதுச்சேரி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நேற்று காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. காலை முதல் முன்னணி நிர்வாகிகள் பலர் கண்டன உரையாற்றி வந்தனர். மாலையில் மாவட்ட துணைத்தலைவர் முருகன், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் காங்கிரசார் அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே முருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.