சிவகங்கை அருகே ஜீவசமாதி அடைவதாக கூறி பக்தர்களிடம் வசூல்வேட்டை நடத்திய சாமியாரின் மகன் உட்பட 3 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை அருகே சாமியார் ஜீவசமாதி அடைவதாக கூறிய சம்பவத்தில் வசூல் வேட்டை நடந்ததாக கூறி, சாமியாரின் மகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை அருகே பாசாங்கரையை சேர்ந்தவர் இருளப்பசாமி (71). இவர் கடந்த 13ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 14ம் தேதி அதிகாலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடையப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தகவலறிந்து ஒரு வாரத்திற்கும் மேலாக ஏராளமானோர் இருளப்பசாமியிடம் திரண்டு வந்து ஆசி பெற்றனர். ஆனால், குறிப்பிட்ட நாளன்று, ஜீவசமாதி அடைவதாக கூறிய நேரம் முடிந்ததும், ஜீவசமாதி அடையாமல் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால், இரவு முழுக்க கண் விழித்துக் காத்திருந்த மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

Advertising
Advertising

 ஜீவசமாதி சம்பவத்தை கூறி ஒரு வாரத்திற்கும் மேலாக வசூல் நடத்தியதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது. ஜீவசமாதி நாடகம் முடிந்த பின்னரும் இருளப்பசாமியின் பெயரைச் சொல்லி, அவரது மகன் கண்ணாயிரம் உட்பட சிலர் உண்டியல் வசூல் செய்துள்ளனர். இதையடுத்து சிவகங்கை எஸ்பி ரோகித்நாதன் உத்தரவின்பேரில் இருளப்பசாமியின் மகன் கண்ணாயிரம், கண்ணன், ஆனந்த் உள்ளிட்ட 7 பேரிடம், சிவகங்கை தாலுகா போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்தினர். மேலும், பாசாங்கரையில் உள்ள சாமியாரின் வீட்டில் நேற்று பிற்பகல் சோதனை நடத்தி வீட்டில் இருந்த பணப்பை மற்றும் உண்டியல் ஆகியவற்றை கைப்பற்றினர். போலீசார் விசாரணை நடத்தியபோது, இருளப்பசாமி முன்னுக்குப்பின் முரணாக பேசி உள்ளார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை.

இந்நிலையில் நாட்டரசன்கோட்டையை சேர்ந்த முருகேசன் என்ற ஒப்பந்ததாரர், ஜீவசமாதி நிகழ்ச்சிக்காக உணவு, ஷாமியானா, விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு பணம் வழங்கப்படவில்லை.

இதையடுத்து முருகேசன் கொடுத்த புகாரின்பேரில், இருளப்பசாமியின் மகன் கண்ணாயிரம், திருமாஞ்சோலையை சேர்ந்த கண்ணன், நாட்டரசன்கோட்டையை சேர்ந்த லெட்சுமணன், கவுரிப்பட்டியை சேர்ந்த கண்ணன், ஆனந்த் ஆகிய 5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து, கண்ணாயிரம், கண்ணன், ஆனந்த் மூவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: