×

அமைச்சர் வேலுமணி தகவல் உள்ளாட்சி தேர்தல் அட்டவணை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

காரைக்குடி: தமிழகத்தில் 2016 அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வார்டுகளை மறுவரையறை செய்ததில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.  இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் உள்ளாட்சி நிர்வாகம் சீர்குலைந்தது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதியையும் மத்திய அரசு நிறுத்தி வைத்தது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளை கண்காணிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் உள்ளாட்சி நிர்வாகப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அக்டோபர் வரை அவகாசம் கோரப்பட்டது. இந்நிலையில், சிவகங்கை  மாவட்டம், காரைக்குடி அருகே  தேவகோட்டை ரஸ்தா பகுதியில் நடந்து வரும் பாதாள  சாக்கடை  திட்ட கழிவுநீர்  சேகரிப்பு பகுதியை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக  வளர்ச்சித்துறை  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள  அனைத்து  வீடுகள், வணிக நிறுவனங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு  ஏற்படுத்த  வேண்டும். மழைப்பொழிவு குறைவே குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம்.  மழைநீர்  சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த மக்கள் ஆர்வத்துடன் செயல்படுகின்றனர்.காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது   குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும். தமிழக தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அட்டவணையை வழங்கி உள்ளது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,court ,Supreme Court , Minister Velumani, Local Elections Schedule, Supreme Court,
× RELATED ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை