ஐதராபாத்தில் அடுத்த மார்ச்சில் நடக்கிறது மென்பொருள் ஏற்றுமதி அதிகரிக்க ‘இந்தியா சாப்ட் 2020 கண்காட்சி’: 75 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

சென்னை: மென்பொருள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்தியா சாப்ட் 2020 என்ற கண்காட்சி ஐதராபாத்தில் வரும் மார்ச் மாதம் நடக்கிறது. இதில் 75 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள்  பங்கேற்கின்றனர்.  இதுகுறித்து, இந்தியா சாப்ட் கண்காட்சியின் சேர்மன் நளின் கோலி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 3, 4 ஆகிய தேதிகளில் ஐதராபாத்தில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில், 75 நாடுகளின் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர். மேலும், இந்தியாவில் இயங்கி வரும் 250 மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை கண்காட்சியில் அமைக்கின்றன. சர்வதேச அளவில் இதில் கலந்துகொள்ளக்கூடிய வெளிநாட்டு நிறுவனங்களும் அரங்கு அமைக்க உள்ளன. கண்காட்சியின் மூலம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் ஏற்றுமதியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி மென்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் செயல் இயக்குனர் டி.கே.ஷெரின் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக நடந்த கண்காட்சியில் அதிக அளவில்  ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கலந்து கொண்டன. குறிப்பாக ஐஐடி, என்ஐடி, பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர். இதில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன. இதேபோன்று இந்த ஆண்டும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகஅளவில் கலந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories: