தலைமை பதிவாளருக்கு மர்ம கடிதம் சென்னை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு வைக்கவுள்ளதாக தலைமை பதிவாளருக்கு டெல்லியிலிருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வரும் 30ம் தேதி வெடிகுண்டு வைக்கப்போவதாக தலைமை பதிவாளருக்கு மர்ம கடிதம் வந்துள்ளது. இந்தியாவின் மிகவும் பாரம்பரியமிக்க உயர் நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றமும் ஒன்றாகும்.  சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு 7 நுழைவு வாயில்கள் உள்ளன. உயர் நீதிமன்ற கட்டிடத்திற்குள் செல்வதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அனுமதி பெற வேண்டும். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 5 பிரதான இடங்களில் சோதனை மையங்களை அமைத்துள்ளனர். கடுமையான சோதனைக்குப் பிறகே வக்கீல்களும், வழக்கு தொடர்பவர்களும் இந்த வளாகத்திற்குள் நுழைய முடியும்.

Advertising
Advertising

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 30ம் தேதி வெடிகுண்டு வெடிக்கும் என்று தலைமை பதிவாளர் அலுவலகத்திற்கு மேற்கு டெல்லி மோதி நகர் சி-13, முதல் தளம், சுதர்ஸன் பார்க் என்ற முகவரியிலிருந்து ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்ற பெயரில் நேற்று மர்ம கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில், “ நான் சர்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவை சார்ந்தவன். அடிக்கடி எனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டிருப்பேன். தெற்கிலிருந்து மத்திய பிரதேசம், மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தர பிரதேசம், அதன்பிறகு உத்தர பிரதேசத்திலிருந்து டெல்லி என மாறிக்கொண்டிருப்பேன். அதற்கேற்ப எனது மொபைல் எண்ணையும் மாற்றிக்கொண்டிருப்பேன். வரும் 30ம் தேதி நானும் எனது மகனும் சென்னை உயர் நீதிமன்ற கட்டிடத்திற்கு பல இடங்களில் குண்டுகளை வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  வழக்கமான பாதுகாப்பை விட தொழில் பாதுகாப்பு படையினரும், லோக்கல் போலீசாரும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த தகவல் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற பதிவாளர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: