அரக்கோணத்தில் வீட்டுமனை பிரிவுக்கு அங்கீகாரம் வழங்க ரியல் எஸ்டேட் அதிபரிடம் 2 லட்சம் லஞ்சம் துணை இயக்குநர் உட்பட 2 பேர் கைது

வேலூர்: அரக்கோணத்தில் வீட்டுமனை பிரிவுக்கு அங்கீகாரம் வழங்க சென்னை ரியல் எஸ்டேட் அதிபரிடம் ₹2 லட்சம் லஞ்சம் வாங்கிய நகர ஊரமைப்பு துணை இயக்குநர், ஓய்வு பெற்ற கண்காணிப்பாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது  செய்தனர்.சென்னையை சேர்ந்தவர் கணேஷ்(52), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் அரக்கோணம் அடுத்த தணிகை போளூரில் கடந்த ஓராண்டுக்கு முன்பு 2.30 லட்சம் சதுர அடி நிலம் வாங்கியுள்ளார். தொடர்ந்து அங்கு வீட்டு மனைகள் போட அனுமதி கேட்டு  வேலூர் அண்ணா சாலையில் உள்ள மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் அனுமதி வழங்காமல், அதிகாரிகள் இழுத்தடித்துள்ளனர்.இந்நிலையில், கடந்த வாரம் வேலூர் நகர ஊரமைப்பு துணை இயக்குநர் ஞானமணியிடம் சென்று இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது, அங்கீகாரம் வழங்க அவர் ₹3 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. பேரம் பேசியதில்  ₹2 லட்சம் கொடுக்க  கணேஷ் ஒப்புக்கொண்டார். பின்னர் இது குறித்து அவர் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் வழிகாட்டுதலின் பேரில், கணேஷ் ₹2 லட்சத்துடன் நேற்று மதியம் 1 மணியளவில் வேலூர் நகர ஊரமைப்பு துணை  இயக்குநர் அலுவலகத்துக்கு சென்றார்.  அங்கு புரோக்கராக இருந்த ராஜசேகர் என்பவர் மூலம் 2 லட்சத்தை துணை இயக்குநர் ஞானமணிக்கு கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஞானமணி, ராஜசேகர்  ஆகியோரை கைது செய்தனர்.  

Advertising
Advertising

தொடர்ந்து அலுவலக கதவுகளை பூட்டிவிட்டு சோதனை நடத்தினர். மேலும் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆவணங்கள், சமீபத்தில் வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட விவரங்களை சேகரித்தனர்.  தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் நகர ஊரமைப்பு துணை இயக்குநராக சென்னையை சேர்ந்த ஞானமணி(55) உள்ளார். இவர் வீட்டு மனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்க பலரிடம் லஞ்சம்  வாங்கியிருப்பதாக தெரிகிறது. இதற்கு கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற சத்துவாச்சாரியை சேர்ந்த ராஜசேகர்(62)  புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார். ₹2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஞானமணி  பொறுப்பேற்று 11 மாதங்களாகிறது. இவர் பொறுப்பேற்ற பிறகு வீட்டுமனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, வீட்டுமனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட விவரங்கள்  சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது’ என்றனர்.

Related Stories: