பால் விலை அதிகரிப்பால் திருவில்லிபுத்தூர் பால்கோவா விலையும் உயர்ந்தது: தீபாவளிக்கு மேலும் உயரும்

திருவில்லிபுத்தூர்: பால்  விலை உயர்வால் திருவில்லிபுத்தூர் பால்கோவா விலையும் உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.விருதுநகர்  மாவட்டம், திருவில்லிபுத்தூர் என்றதும், அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆண்டாள் கோயில் மற்றும் சுவை மிகுந்த பால்கோவா இரண்டும் தான். திருவில்லிபுத்தூர்  மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில், குடிசைத்தொழிலாக  பால்கோவா தயாரிக்கப்படுகிறது. பசும்பாலில்  சுகாதாரமான முறையில் பால்கோவா தயாரிக்கப்படுவதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.  ஐயப்பன் கோயில் சீசன், குற்றால சீசன் மற்றும் ஆண்டாள் கோயில் தேரோட்டம் ஆகிய  காலங்களில் பால்கோவா விற்பனை உச்சத்தில் இருக்கும். இத்தகைய சிறப்பு  வாய்ந்த திருவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு கடந்த வாரம் புவிசார்  குறியீடு வழங்கப்பட்டது. இதையடுத்து பால்கோவாவின் விற்பனை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனிடையே தமிழக அரசு பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்தியது. இதனால் பால் மற்றும் பால் சார்ந்த  பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. ஆவினில் 10 நாட்களுக்கு முன்பே பால்  விலை உயர்ந்தது. அடுத்ததாக  தயிர், லஸ்சி, மோர் மற்றும்  மைசூர்பா, பால்பேட், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.பால் விலை உயர்வால், திருவில்லிபுத்தூரில் பால்கோவா விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் கிலோ ₹240க்கு விற்ற பால்கோவா தற்போது ₹260க்கு விற்பனையாகிறது.  தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கிலோ ₹300 வரை விலை  உயரும் என  திருவில்லிபுத்தூர் பால்கோவா வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: