கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் 25 சதவீத மாணவர்களுக்கு கட்டணம் வழங்ககோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை வழங்க கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கல்வி செலவை அரசு, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் செலவு தொகையை மட்டுமே தனியார் பள்ளிகளுக்கும்  வழங்கப்படும் என கட்டாய கல்வி உரிமைச் சட்டப்பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரி சென்னையில் பல்வேறு பள்ளிகளை நடத்தி வரும் பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சங்கத்தின்சார்பில் ஆஜரான வக்கீல், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும்  கட்டணத்தை விட, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படுபவர்களுக்கு குறைவான செலவு தொகையை அரசு வழங்குகிறது. இந்த மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு  நிர்ணயிக்கும் கட்டணத்தையே வழங்குமாறு உத்தவிட வேண்டும் என்று வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய அரசு மற்றும் தமிழக அரசுகள் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

Related Stories: