இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜ முயற்சி: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜ முயற்சி செய்வதாக கே.எஸ்.அழகிரி கூறினார்.சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  இந்தியா என்பது பல மாநிலங்கள், பல மொழிகள், பல கலாசாரங்கள், பல இறைவழிபாடுகள் கொண்டது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பது எதிர்மறையான கருத்தாகும். ஆர்எஸ்எஸ்சின் கொள்கையே எதிர்மறையானதுதான்.  இயல்புக்கு புறம்பாக பேசுவது, சிந்திப்பது, நடைமுறைப்படுத்த முடியாததை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தம். தற்போது, அதன் உச்சக்கட்டமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவின் ஒரேமொழி இந்தி என கூறுகிறார். 120 கோடி மக்கள் வாழும் தேசத்தில் ஒரே மொழி என்பது எப்படி சாத்தியமாகும்.  இந்தியை பரவலாக பேசலாம். ஆனால்,  எல்லோரும் பேசுகின்றனர் என சொல்ல முடியாது. ஒரு மொழியை விரும்பிப் படிக்கலாம். ஆனால், அதை திணிக்க முற்பட்டால் எதிர்ப்பு, வெறுப்பு வரும். மக்களின் உளவியல் தன்மையை அமைச்சர் அமித்ஷா புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த நாடு ஒற்றுமையாக இருக்கிறது. இதற்கு தீங்கு விளைவிக்க பாஜ அரசு முயற்சிக்கக்கூடாது. தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் கேட்டு  பெறவேண்டும். அவர் மத்திய அரசிடம் ஏதேதோ கேட்டு பெறுகிறார். அதேபோல், தமிழக மக்களுக்கு தேவையான மண்ணெண்ணெயையும் கேட்டுப் பெறவேண்டும். தமிழகத்தில் பருவமழை துவங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்வது தமிழக அரசின் அன்றாட செயல்பாடுகளில் ஒன்று. அந்த முக்கிய கடமையை செய்யாமல் மாநில அரசு இருந்துவிடக்கூடாது. இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

Related Stories: