×

ஆஷஸ் டெஸ்ட் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

லண்டன்: ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த 5வது மற்றும் கடைசி டெஸ்டில், 135 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மோதியது. நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 294 ரன் குவிக்க, அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 225 ரன்னுக்கு சுருண்டது. இதைத் தொடர்ந்து, 69 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 329 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 399 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி 263 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மேத்யூ வேடு அதிகபட்சமாக 117 ரன் (166 பந்து, 17 பவுண்டரி, 1 சிக்சர்) எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

 இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டூவர்ட் பிராடு, ஜாக் லீச் தலா 4 விக்கெட், ஜோ ரூட் 2 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி 135 ரன் வித்தியாசத்தில்வென்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. எனினும், ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய அணி தக்கவைத்துக் கொண்டது.
முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் (774 ரன்), இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (441 ரன்) தொடர் நாயகன் விருதை பகிர்ந்துகொண்டனர்.

47 ஆண்டுக்குப் பிறகு...
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடர், 47 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக சமனில் முடிந்துள்ளது. முன்னதாக 1972ல் இங்கிலாந்தில் நடந்த தொடர் 2-2 என டிரா ஆகியிருந்தது. அப்போது இங்கிலாந்து அணி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இம்முறை ஆஸி. அணி கோப்பையை இழக்காமல் நாடு திரும்புகிறது.

Tags : England ,Ashes Test , England,equaled,Ashes Test,series
× RELATED இந்திய-ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு