டி20ல் தொடர்ச்சியாக 12வது வெற்றி ஆப்கானிஸ்தான் அணி அசத்தல்

தாக்கா: சர்வதேச டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக 12வது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. வங்கதேசத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில், ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் மோதிய லீக் ஆட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. டாசில் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. அஸ்கர் ஆப்கன் 40 ரன் (37 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), முகமது நபி ஆட்டமிழக்காமல் 84 ரன் (54 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினர். வங்கதேச பந்துவீச்சில் சைபுதின் 4, ஷாகிப் ஹசன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 19.5 ஓவரில் 139 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மகமதுல்லா 44 ரன் (39 பந்து, 5 பவுண்டரி), சப்பிர் ரகுமான் 24, ஆபிப் உசேன் 16, கேப்டன் ஹாகிப் ஹசன், முஸ்டாபிசுர் தலா 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் முஜீப் உர் ரகுமான் 4, பரீத் அகமது, ரஷித் கான், குல்பாதின் நயிப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 25 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான், 2018-19ல் விளையாடிய சர்வதேச டி20ல் தொடர்ச்சியாக 12வது வெற்றியுடன் தனது முந்தைய சாதனையை முறியடித்தது. அந்த அணி 2016-17ல் தொடர்ச்சியாக 11 வெற்றி பெற்றிருந்தது. முத்தரப்பு தொடரில் 3 அணிகளும் தலா 2 முறை விளையாடி உள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் (4 புள்ளி), வங்கதேசம் (2 புள்ளி) முன்னிலை வகிக்க, ஜிம்பாப்வே (0) கடைசி இடத்தில் உள்ளது. நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

Related Stories: