×

தாமிரபரணி ஆற்றில் யாழி, அன்னம், மனிதவால் குரங்கு உள்ளிட்ட அரிய பொருட்கள்: கொற்கை மன்னனின் விலை உயர்ந்த பவளம், வைடூரிய புதையல் உள்ளதா?

செய்துங்கநல்லூர்: தாமிரபரணி ஆற்றில் தோண்ட, தோண்ட பல பொருட்கள் கிடை த்த வண்ணம் உள்ளன. இதில் யாழி, அன்னம், மனிதவால் குரங்கு உள்ளிட்ட பொருட்களும் அடங்கும். இங்கு கொற்கை மன்னனின் விலை உயர்ந்த பவளம், வைடூரியம் உள்ளிட்ட நகை குவியல்கள் இருக்க கூடும் என்று தெரிகிறது. நேற்று நேரில் பார்வையிட்ட தொல்லியல் குழுவினர் பல அரிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்-முக்காணி தாமிரபரணி ஆற்றின் மேற்கு பகுதியில் உமரிக்காடு பகுதியில் பாசனத்திற்காக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதுபோல் ஆத்தூருக்கு கிழக்கே புன்ைனக்காயலுக்கு முன்பாக ஒரு ஆண்டுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது ஆற்றில் நீர் வரத்து குறைந்ததாலும், புன்னைக்காயல் தடுப்பணையால் கடல் நீர் உமரிக்காடு வரை வர முடியாததால் இடைப்பட்ட ஆறு வறண்டு போய் கிடக்கிது. இங்கு மேற்கு பகுதியில் பழமையான கட்டிடங்கள் சிதைந்து கிடப்பது சில நாட்களுக்கு முன் தெரியவந்தது. இதுகுறித்து கடந்த 11ம்தேதி முதன் முறையாக அந்த கட்டிடங்கள் குறித்து படங்களுடன் `தமிழ்முரசு’ செய்தி வெளியிட்டது. அதன்பிறகுதான் இது வெளி உலகிற்கு தெரியவந்தது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் உயிரியல் துறை தலைவர்  பேராசிரியர் டாக்டர் சுதாகர் அன்றே அந்த இடத்தை பார்வையிட்டார். அங்குள்ள கட்டிட பகுதியை பார்த்துவிட்டு இது 2500 ஆண்டுகளுக்கு முன் கொற்கை மன்னன் காலத்து கட்டிடம் போல் தெரிகிறது என்றார். ஆய்விற்காக சில கற்களை எடுத்துச்சென்றார்.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சிவகளையைச் சேர்ந்த தொல்லியல் துறை ஆராய்ச்சி மாணவர் மாணிக்கம், மற்றும் ஆய்வாளர் ஆறுமுகநேரி தவசிமுத்து, சமூக ஆர்வலர் நெடுஞ்செழியபாண்டியன் உள்ளிட்ட பலர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்களும் கொற்கை மன்னன் காலத்து  கட்டிடங்களாகத்தான் இருக்ககூடும் என்ற கருத்தை தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அந்த இடத்திற்கு வந்த பூ உலகின் நண்பர்கள் ஆர்ஆர் சீனிவாசன், நெல்லை தொல்லியல் ஆய்வாளர் ஹரீஸ், நாட்டார்குளம் ரெனி பவுன்டேஷன் செரீன் ஜேக்கப், சமூக ஆர்வலர் நெடுஞ்செழியபாண்டியன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் அங்கு தோண்டி பார்க்கையில் சில அரிய பொருட்கள் கிடைத்தன. யாழி, அன்னப்பறவை, வால் கொண்ட மனித உருவ சிலை, பெண் தெய்வ சிற்பம், ஆதிச்சநல்லூரில் கிடைத்தது போன்று இரு வண்ண கலர் கொண்ட முதுமக்கள் தாழி உதிரிபாகங்கள் கிடைத்துள்ளன. அந்த பகுதியை சுற்றி பெரிய கோட்டை இருப்பதற்கான அறிகுறிகளும் காணப்பட்டது. இங்கு கிடைத்த கற்கள், செங்கற்கள் மருதூர் அணையிலும் உள்ளது. மேலும் படகுகள் நிறுத்துவதற்காக கல்லால் செய்யப்பட்ட பெரிய நங்கூரம் இருந்துள்ளது. இங்குள்ள கட்டிடங்கள் கற்களாலும், செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. கொற்கை மன்னன் காலத்தில் இந்த கட்டிடங்கள் சிதைந்து போனதால் அதன்பிறகு வந்த நாயக்கர் மன்னர்கள் இந்த கோட்டையை சற்று சீரமைத்து இருக்க கூடும் என்றும், அதன்பிறகு அவர்கள் காலம் முடிந்து ஆங்கிலேயர்கள் காலத்திலும் செங்கற்களால் இந்த கட்டிடங்கள் மேலும் சீரமைக்கப்பட்டிருக்க கூடும் என்றும் தெரிகிறது.

இது தவிர யாழி, அன்னப்பறவை வரையப்பட்டுள்ள கல்சிற்பங்கள் நாயக்கர் மன்னர்கள் காலத்தில்தான் பயன்படுத்தி இருப்பதாக தெரிகிறது. இதனால் இந்த பகுதியில் முதலில் கொற்கை மன்னன், அதன்பிறகு நாயக்கர் மன்னர்கள், அதைத்தொடர்ந்து ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்துள்ளது உறுதி செய்யப்படுகிறது. மேலும் கொற்கை மன்னன் காலத்தில் வணிகம் சிறந்து ஓங்கியதால் வெளிநாட்டில் உள்ள பவளம், வைரம், வைடூரியம் போன்ற விலை உயர்ந்த புதையல்களும் இப்பகுதியில் இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இன்னும் ஆழமாக தோண்டினால் இதன் பகுதி பல இடங்களுக்கு செல்லக்கூடும். மீண்டும் ஆற்றில் தண்ணீர் வருவதற்குள் நெல்லை அருங்காட்சியக துறையினர் இங்கு கிடைத்துள்ள அரிய பொருட்களை எடுத்து சென்று பாதுகாக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை. மேலும் தோண்டினால் இன்னும் பல தகவல்கள் வெளிவரக்கூடும். எனவே தொல்லியல் துறையினர் கீழடி, ஆதிச்சநல்லூரில் ஆய்வு செய்வது போல் இங்கும் மேற்கொள்ளவேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் விருப்பமாகும்.

ஆதிச்சநல்லூர்வரை படகில் வணிகம்

மன்னர்காலத்து ஆட்சிகள் முடிவுற்று ஆங்கிலேயர்கள் இங்கு வந்த பிறகு பல அணைகள் கட்டியிருக்கிறார்கள். அதில் திருவைகுண்டம் அணைக்கட்டு முக்கியமானதாகும். இவர்கள் வருவதற்கு முன், தாமிரபரணி ஆறு திருவைகுண்டத்திற்கு கிழக்கே ஒழுங்கற்று ஓடியிருக்கிறது. அதை ஒன்றாக சீரமைத்துதான் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுத்து சென்று புன்னைக்காயல் வரை விட்டுள்ளனர். மேலும் நூறு ஆண்டுக்கு முன் தாமிரபரணியி் எப்போதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. அணைகள், பாலங்கள் இல்லாததால், ஆத்தூரில் இருந்து இங்கு விளையும் பொருட்களை திருவைகுண்டத்தை கடந்து ஆதிச்சநல்லூர் வரை படகில் கொண்டு சென்று வணிகம் செய்துள்ளதும், அங்கு விளையும் பொருட்களை எடுத்து வருவதுமாக இருந்துள்ளனர். இது தவிர மக்கள் பொருட்கள் வாங்கவும் படகில் சென்று வந்துள்ளனர். தற்போது பல இடங்களில் பாலங்கள், தடுப்பு அணைகள் கட்டப்பட்டதால் படகு போக்குவரத்து முற்றிலும் நின்றுபோயுள்ளது.

சிறிய துறைமுகம் இருந்ததா?

கொற்கையை மன்னன் வெற்றிவேல் நெடுஞ்செழியபாண்டியன் 2500 ஆண்டுக்கு முன் ஆட்சி செய்தபோது கொற்கையில் பெரிய துறைமுகம் இருந்துள்ளதாக தெரிகிறது. அப்போது வணிகம் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. தற்போது தாமிரபரணி ஆற்றில் புதைந்த கட்டிடங்கள் ெகாற்கை மன்னனின் சிறிய துறைமுகமாக இருந்திருக்ககூடும் என்றும், பெரிய படகு கப்பல்கள் இங்கு வரை வந்து செல்ல முடியாததால் கப்பலில் உள்ள பொருட்களை சிறிய படகில் ஏற்றி இந்த பகுதிக்கு கொண்டு வந்து சேமித்து வைத்திருக்க கூடும் என்றும் தெரிகிறது. அதனால் தான் படகுகளை கடலில் நிலைநிறுத்தும் கல்நங்கூரம் இங்கு கிடைத்துள்ளது. இது தவிர இந்த பகுதியில் அரண்மனையும் இருந்திருக்க கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

Tags : king ,Tamraparani River ,Thamirabarani River , Copper River, Yasi, Anna, Human Tailed Monkey, Coral
× RELATED மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான...