மேலூரில் 9 மாதமாக கிடப்பில் போடப்பட்ட சாலை விரிவாக்கப்பணி: வாகன ஓட்டிகள் அவதி

மேலூர்: மேலூர் நான்குவழிச்சாலையில் இருந்து நகரை இணைக்கும் வகையில் துவக்கப்பட்ட விரிவாக்க பணி கடந்த 9 மாதமாக இழுபறியில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலூர் நாவினிப்பட்டி நான்குவழிச்சாலையில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை சாலையை விரிவுப்படுத்தும் பணி கடந்த ஜனவரி மாதத்தில் துவங்கியது. இதற்காக இந்த 1 கிலோமீட்டர் தூரத்திற்குள் 3 இடங்களில் தரைப்பாலம் அமைக்கும் பணிகளும் அத்துடன் சேர்ந்து நடைபெற்று வந்தது. சாலையை இரண்டாக பிரித்து ஒரு பக்கத்தில் முற்கட்டமாக பாலப்பணி நடைபெற்றது. அரசு பணிமனை எதிரில்  பாலப்பணிகள் 2 மாதங்களில் முடிவடைய பாதை திறக்கப்பட்டு, மறுபக்க பாதை பணி 2 மாதங்களில் நடந்து முடிந்தது. ஆனால் பெரியாற்று கால்வாயில் அமைக்கப்பட்ட பால பணி நீண்ட இழுபறிக்கு பிறகு தற்போது தான் முடிவுக்கு வந்துள்ளது.

அதே நேரத்தில் சாலையை விரிவுப்படுத்துவதற்காக ரோட்டோரமாக இருந்த பல வருட பழமையான சில மரங்களை நெடுஞ்சாலை வெட்டி அப்புறப்படுத்தியது. விரிவாக்கத்திற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு அதை பரப்பி விட்டனர். அதன்பிறகு அதில் தார் ஊற்றி சாலை பணியை முழுமையாக முடிக்காமல் அப்படியே 9 மாதமாக விடப்பட்டுள்ளது.  இதனால் இவ்விடத்தை கனரக வாகனங்கள் கடக்கும் போது எழும் தூசி படலம் டூவீலரில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களை மிகவும் தொல்லை படுத்தி வருகிறது. தினசரி 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இவ்விடத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இப்பணிகள் முடிய ஏன் இவ்வளவு கால தாமதம் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, சாலையை ஒட்டி உள்ள மின்கம்பங்களை அகற்றி, தள்ளி ஊன்றினால் மட்டுமே சாலை விரிவாக்க பணிகள் முற்று பெறும் என மின்வாரியம் மீது குற்றச்சாட்டை வைக்கின்றனர். மின்வாரியத்தினரோ ஊழியர் பற்றாக்குறையை காரணம் காட்டுகின்றனர். எப்படியே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்தி விட்டு விரைந்து இப்பணிகளை முடிக்க வேண்டும் என மேலூர் நகர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: