×

செப்.16-சர்வதேச ஓசோன் தினம் பூமியின் பாதுகாவலன் ஓசோன்

ஓசோன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோனை பாதுகாக்க ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன் தினமாக கொண்டாடுகிறது. ஓசோன் படலம் என்பது நமது பூமியை போர்த்தியிருக்கும் ஒரு மெல்லிய வாயுப் படலமாகும். இது ஆக்ஸிஜனின் ஒரு வடிவம் ஆகும்(O3). அதாவது மூன்று ஆக்சிஜ‌ன் அணுக்கள் சேர்ந்தது ஒரு ஓசோன் மூலக்கூறு ஆகும். ஓசோனை சி.எப்.ஸ்கோன்பின் என்பவர் கண்டறிந்தார். ஓசோனானது பூமிக்கு மேலே வாயு மண்டலத்தில் ஸ்ட்ரேடோஸ்பியரில் 10-50 கிமீ தொலைவில் காணப்படுகிறது.

ஸ்பெக்ரோபோட்டோ மீட்டர் என்ற கருவியை கொண்டு பூமியில் இருந்து ஓசோனை அளக்கலாம். ஓசோனின் முக்கிய பணியே சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து பூமியில் உள்ள உயிர்களை பாதுகாப்பதுதான். ஸ்ட்ரேடோஸ்பியரில் உள்ள ஓசோனின் அளவு 1 சதவீதம் குறைந்தாலும் பூமியை வந்து அடையும் புற ஊதாக்கதிரின் அளவு அதிகரித்து உயிரிகளின் டிஎன்ஏவை நேரிடையாக பாதிக்கும். இதனால் அனைவரும் கடலுக்கு அடியிலோ தரைக்கு அடியிலோ பதுங்க வேண்டிய நிலை ஏற்படும். உயிரினங்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

ஓசோன் துளை என்பது வளிமண்டலத்தில் உள்ள மற்ற இடங்களை ஒப்பிடுகையில் இங்கு ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்து காணப்படும் நிலை ஆகும். உண்மையில் இது துளை இல்லை.  இயற்கையில் ஓசோன் உருவாகும் அளவும் சிதைக்கப்படும் அளவும் சமமாக இருக்கும் போது வளிமண்டலத்தில் ஓசோனில் எந்தவித பாதிப்பு இல்லை. ஆனால் மனித செயல்பாட்டால் அதிக அளவில் ஓசோன் சிதைக்கப்படுவதால் துளை ஏற்படுகிறது. 1980ம் ஆண்டில் அண்டார்டிக்காவில் மிகப் பெரிய ஓசோன் இழப்பு (துளை) கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இங்கு ஓசோனின் அளவானது மற்ற இடங்களில் ஒப்பிடுகையில் 30 சதவீதம் குறைந்து காணப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் குளோரோ புளூரோ கார்பன் ஆகும். இதே போன்ற துளைகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்க போன்ற இடங்களிலும் கண்டறியப்பட்டது. ஓசோன் இழப்பால் அதிகமான புற ஊதா கதிர்கள் பூமியை வந்து அடைவதால் மனிதனுக்கு தோல் நிறமிப் புற்றுநோய், கண்பார்வை குறைபாடு, நோய்தடை காப்பு மண்டலம் செயலிழப்பு, எரித்திமா போன்ற பாதிப்புகள் ஏற்படும் இறுதியாக மனித இனமே புவியில் இருந்து அழிந்து விடும். புவியில் உள்ள அனைத்து தாவரங்களிலும் பச்சையங்கள் பாதிக்கப்பட்டு விளைச்சல் இல்லாமல் தாவர இனமே அழிவை சந்தித்து விடும். நீர் மற்றும் நிலத்தில் வாழும் விலங்குகள் இறக்க நேரிடும் இதனால் புவியில் உணவு சங்கிலி பாதிக்கப்படும்.

நாம் அதிகம் பயன்படுத்தும் குளிர் சாதனங்களான ப்ரிட்ஜ் மற்றும் ஏசி  இயந்திரங்களில் நிரப்பப்படும் வாயுக்களே ஓசோன் பாதிப்புக்கு பெருமளவு  காரணம். இதுபோன்ற வாயுக்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், புதிய பொருள்களைக்  கண்டுபிடித்தால், அதை ஊக்கப்படுத்துவதை வலியுறுத்தியும் கடந்த 1987ம்  ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகள் இணைந்து கையொப்பமிட்ட மான்ட்ரீல் சாசனம்,  செப்டம்பர் 16ம் நாள் வெளியிடப்பட்டது. இந்நாளை 1994 ல் சர்வதேச ஓசோன்  தினமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு,  பூமி வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பரவலான  விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Tags : Defender ,Earth ,World Ozone ,Save The Earth , Ozone Layer, United nations, World Ozone Day,The Montreal Protocol has led to the phase-out of 99 percent of ozone-depleting chemicals in refrigerators, air-cooling systems and other products.
× RELATED முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருள்