மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: சிவசேனா தனித்து போட்டி என தகவல்

மும்பை: மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காமல், சிவசேனா தனித்து போட்டியிட இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்து  முதலில் 144 தொகுதிகளில் போட்டியிட சிவசேனா விரும்பியது. ஆனால் சரிசமமான தொகுதிகளை ஒதுக்க தயக்கம் காட்டிய பாஜக 106 தொகுதிகளை  மட்டுமே சிவசேனாவுக்கு ஒதுக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குறைந்த பட்சம் 120 தொகுதிகளையாவது தங்களுக்கு ஒதுக்குமாறு கோரியுள்ளார்.  மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தால் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை வகிக்கவும் சிவசேனா கோரியதாக தகவல்கள்  வெளியாகின. இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டில் இதுவரை உடன்பாடு எட்டப்படாததால், கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிடவும் தயாராக  இருக்குமாறு கட்சியினருக்கு சிவசேனா தலைவர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்தும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இதுகுறித்து ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. கடந்த  2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 122 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்த நிலையில், சிவசேனா 63  இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: