×

மூணாறு பகுதியில் தொடரும் உயிரிழப்பு: காட்டு யானைகளுக்கு வேட்டு வைக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

மூணாறு: மூணாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் வீசியெறிந்து செல்லும் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்வதாலும், சக்தி வாய்ந்த மின்வேலி மற்றும் வெடிபொருட்களாலும் காட்டுயானைகள் உயிரிழப்பு தொடர்கதையாகி உள்ளது. தென்னகத்து காஷ்மீர்’ என்றழைக்கப்படும் மூணாறில் சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு அதிக அளவில் விருந்து படைப்பது காட்டுயானை கூட்டங்களாகும். மூணாறில் உள்ள மாட்டுப்பட்டி, குண்டளை, சின்னக்கானல், சின்னார், மாங்குளம், எல்லப்பட்டி, காந்தளூர், மறையூர், வட்டவடை போன்ற பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் ஏராளமான காட்டுயானைகள் வசிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக மூணாறு மற்றும் சுற்றுவட்டாரங்களில் காட்டுயானைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் உயிர் இழந்த காட்டு யானைகளின் எண்ணிக்கை 12 ஆகும். இந்த ஆண்டு மட்டும் மூணாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 யானைகள் உயிரிழந்துள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்பு கேடிஹெச்பி நிறுவனத்திற்கு சொந்தமான செண்டுவாரை எஸ்டேட் பகுதியில் 25 வயதுடைய `சில்லி கொம்பன்’ என்ற காட்டுயானை உயிரிழந்தது. ஜேசிபி இயந்திரம் மூலம் யானையை விரட்ட முயன்ற போது காயமேற்பட்டு அந்த யானை உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் அறிக்கை கொடுத்துள்ளனர். தலையார் எஸ்டேட் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க யானை பாறையில் தவறி விழுந்து இறந்தது.

சுற்றுலாப்பயணிகள் வீசி எறிந்து செல்லும் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்வதாலும், சக்தி வாய்ந்த மின்வேலிகள் மூலமும், காட்டுயானைகள் உயிரிந்து வருகின்றன. 2015ம் ஆண்டு தேவிகுளம் பகுதியில் மட்டும் 3 யானைகள் இறந்துள்ளன. நேரியமங்கலம் பகுதியில் 2015, பிப். 23ம் தேதி 2 வயதுடைய யானை நிமோனியா நோயால் இறந்தது. கடந்த ஆண்டு நவ. 4ம் தேதி தேவிகுளம் பகுதியில் இரண்டு யானைகளுக்கு இடையை ஏற்பட்ட சண்டையில் கொம்பன் யானை குத்தி ஒற்றை யானை பரிதாபமாக உயிர் இழந்தது. 2016ம் ஆண்டு 3 யானைகள் மூணாறில் உயிரிழந்தன. இதில் ஒரு யானை பிளாஸ்டிக் உட்கொண்டதால் இறந்திருப்பது தெரியவந்தது. இதனால் யானைகளின் எண்ணிக்கை இடுக்கி மாவட்டத்தில் குறைந்து கொண்டு வருகிறது. இதேபோல விவசாய நிலங்களில் உள்ளே புகும் யானைகள் சக்தி வாய்ந்த மின்வேலிகள் மூலம் உயிரிழப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. வனத்துறை சட்டங்களை மீறி 2002ம் ஆண்டு முதல் சின்னக்கானல், சாந்தம்பாறை பஞ்சாயத்துகளில் விவசாய நிலங்களில் யானைகள் நுழைவதை தடுக்க மின்வேலிகள் அமைக்க அதிகாரம் கொடுக்கப்பட்டது. 20 வோல்ட் வரை மின்சாரம் இந்த மின்வேலிகள் வழியாக செல்கிறது. இதை சிலர் தவறாக பயன்படுத்தி 230 வோல்ட் வரை மின்சாரத்தை மின்வேலிகளில் செலுத்துகின்றனர். இதனால் மின்சாரம் தாக்கி பல யானைகள் உயிரிழந்து வருகின்றன. இதேபோல சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகளை வனப்பகுதியில் விட்டுச் செல்கின்றனர். இதனை உட்கொள்ளும் யானைகள் உயிரிழக்கின்றன. இதனைத் தடுக்க இதுவரை வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மூணாறில் தேயிலை தோட்டங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் யானைகள் நுழையும் போது வெடிமருந்துகளை அவற்றின் மீது பொதுமக்கள் வீசி துரத்துகின்றனர். மேலும் தீப்பந்தங்களை எறிந்தும், கற்கள் மூலம் தாக்கியும் யானைகள் துரத்துவதால் பல யானைகள் தீக்காயம் ஏற்பட்டு உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘யானைகள் சுற்றித்திரியும் பகுதிகளை ஆக்கிரமித்து சில நபர்கள் கட்டிடங்களையும், விவசாய நிலங்களையும் அமைத்துள்ளனர். மேலும் தங்களுக்கு உரிய இடம் என்று கருதி வரும் யானைகள் பல நேரங்களில் மின்வேலி மற்றும் வெடிமருந்துகள் மூலம் கொல்லப்பட்டு வருகின்றன. எனவே, வனத்துறை அதிகாரிகள் வன விலங்குகள் வரும் இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்தி வனஉயிர்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும்’’ என்கின்றனர்.

Tags : Munnar, plastic waste
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...