×

ஆவின் பால்விலை உயர்வை தொடர்ந்து தனியார் பாலும் லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் ஆவின்பால் விலை உயர்வை தொடர்ந்து தனியார் பால் விலையும் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. பசுந்தீவனம் மற்றும் தவிடு, புண்ணாக்கு விலை உயர்வை தொடர்ந்து பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, தமிழக அரசு ஆவின் பால் விலையை கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தியது. ஆவின் பால் விலையை ஏற்றத்தை தொடர்ந்து தற்போது, தனியார் பால் நிறுவனங்களும் பாலின் விலையை உயர்த்தியுள்ளன. அதன்படி, ஒரு லிட்டர் ரூ.46க்கு விற்பனை செய்யப்பட்ட தனியார் பால் நேற்று முதல் ரூ.2 உயர்த்தி ரூ.48க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், நிறைகொழுப்பு பால் லிட்டர் ரூ.52க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ.4 வரை உயர்த்தி ரூ.56க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பால்விலை உயர்வினால், பெரிய அளவில் விற்பனையில் பாதிப்பு ஏற்படாது என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். பால்விலை உயர்வை தொடர்ந்து நெய், வெண்ணெய் ஆகியவற்றின் விலையும் ரூ.30 முதல் ரூ.40 வரையும், பால் பொருட்களினால் செய்யப்படும் ஸ்வீட்ஸ் விலையும், பால் பவுடர்களின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags : aavin, milk price
× RELATED கோடை காலத்தையொட்டி மோர் விற்பனை 25% அதிகரிப்பு: ஆவின் நிர்வாகம் தகவல்