×

தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளும் மோசமாக கிடப்பதால் அதிக விபத்துக்கள் நடந்து வருகின்றன. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடை அருகே அமைந்துள்ளது ஐக்கியான்குளம். இந்த குளத்தின் பகுதியில் தடுப்பு சுவர் இல்லாததால், வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன. எனவே வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க, இந்த பகுதியில் தடுப்பு சுவருடன் கூடிய சிறு பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை (நாகர்கோவில் மண்டலம், திருநெல்வேலி வட்டம்) சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அதன்படி டெண்டர் விடப்பட்டு, ரூ.4 கோடியே 83 லட்சத்து 25 ஆயிரத்து 384 மதிப்பில் சாலையின் இருபுறமும் சிறு பாலம் அமைக்க பணிகள் தொடங்கினர். பணிகள் தொடங்கி 9 மாதங்கள் ஆகியும் இன்னும் பணிகள் முடிவடைய வில்லை. இதனால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் சுங்கான்கடை பகுதியில் சாலைகள் மிக மோசமாக உள்ளன. அந்த பகுதியில் ஜல்லிகளும் குவித்து வைத்து இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் சிக்கி திணறுகிறார்கள். குறிப்பாக பைக்கில் செல்பவர்கள் அதிகம் பேர் தடுமாறி விழுந்து படுகாயம் அடைகிறார்கள். இதே போல் மேலும் பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைப்பதில், தேசிய நெடுஞ்சாலைத்துறை அலட்சியமாக இருந்து வருகிறது.

மோசமாக கிடக்கும் சாலைகளால் அதிகளவில் விபத்துக்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக வார இறுதி நாட்களில் அதிக விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் நேற்று முன் தினம் (சனி) காலை முதல் நள்ளிரவு வரை மாவட்டத்தில் நடந்த விபத்துக்களில் சுமார் 20 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். இவர்கள் ஆங்காங்கே உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களில் சிலரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் தான் அதிக விபத்துக்கள் நடந்துள்ளன. எனவே தேசிய நெடுஞ்சாலையில் கிடப்பில் கிடக்கும் பணிகளை வேகமாக முடித்து, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சாலை பணிக்காக தேசிய நெடுஞ்சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவாக உள்ளது. இந்த நிதியை வைத்து பணிகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் ஜல்லி, மணல் பிரச்னையும் உள்ளது. இதனால் பணிகள் கிடப்பில் கிடக்கின்றன என்றார்.

1892 வழக்குகள் பதிவு

விபத்துக்களை குறைக்கும் வகையில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி, வழக்கு பதிவு செய்தாலும் கூட வாகன ஓட்டுநர்கள் வேகத்தை குறைத்ேதா, கவனமாகவோ வாகனங்களை ஓட்டுவதில்லை. குறிப்பாக பைக், கார்கள், டிப்பர் லாரிகள், ஆட்டோக்கள் நகர பகுதிகளிலும் அதி வேகமாக செல்கின்றன. தமிழகத்தில் புதிய போக்குவரத்து விதிமுறைப்படி அபராதம் வசூலிப்பு இன்னும் தொடங்க வில்லை. தற்போதைய நிலையில் பழைய அபராத தொகை தான் வசூலிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குமரி மாவட்டத்திலும் நேற்று முன் தினம் போலீசார் வாகன சோதனை நடத்தியதில், மொத்தம் 1892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் நாகர்கோவில் துணை போலீஸ் சரகத்தில் 449 வழக்குகளும், தக்கலையில் 409, குளச்சலில் 544, கன்னியாகுமரியில் 490 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் ஹெல்மெட் வழக்குகள் மொத்தம் 1,202 ஆகும். சீட் பெல்ட் இல்லாமல் கார் ஓட்டியதாக 269 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் பழைய விதிமுறைப்படியே அபராதம் வசூலித்துள்ளனர். அக்டோபர் 1ம் தேதியில் இருந்து புதிய முறைப்படி அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags : accidents ,National Highway ,Kumari , National Highway, Accident
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...