×

துரைப்பாக்கம் கண்ணகி நகரில் உள்ள எம்டிசி பணிமனையில் மரண பள்ளம்: பயணிகள் அச்சம்

சென்னை: துரைப்பாக்கம் கண்ணகி நகரில் உள்ள எம்டிசி பணிமனையில் ஆபத்தான நிலையில் உள்ள பாதாளகுழியால் பணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் 3 ஆயிரத்தக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் பஸ்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பணிமனைகளில் பராமரிப்பு செய்யப்படும். இதில், துரைப்பாக்கம் கண்ணகிநகரில் உள்ள பணிமனையும் அடங்கும். இங்கிருந்து கேளம்பாக்கம், பிராட்வே, கோவலம் என பல்வேறு வழித்தடங்களில் 30க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு கழிவுநீர் கால்வாய் உடைந்து ஆங்காங்கே மரண பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை அதிகாரிகள் நீண்ட நாட்களாக சீரமைக்காததால், பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும், அங்கு வரும் பயணிகள் இந்த பள்ளத்தில் தவறி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. இதுகுறித்து எஸ்விஎஸ்-ஏஏபி தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் அன்பழகன் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களுக்கு வடபழனி பணிமனையில் இரவுநேரத்தில் ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சோதனை செய்து கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலிருந்த சுவரின் மீது மோதியது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கண்ணகிநகர் பணிமனையில் நீண்ட நாட்களாக உள்ள மரண பள்ளம் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதன்மூலமும் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. பணிமனைக்கு செல்லும் சாலை முற்றிலும் சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இதில், மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிப்பதால், டிரைவர்கள் சிரமத்துடன் பஸ்சை இயக்க வேண்டியுள்ளது.எம்டிசி நிர்வாகம் ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவது வேதனையாக உள்ளது. எனவே இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்’’ என்றார்.


Tags : MTC Workshop ,Kannaki , MTC Workshop, Death Crater, Travelers, Fear
× RELATED கண்ணகி கதையைக் கூறும் ஆற்றுக்கால் தேவி கோயில் சிற்பங்கள்