×

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுரங்க பாதைகளை கண்காணிக்க சிறப்பு குழு: கமிஷனர் பிரகாஷ் உத்தரவு

சென்னை: பருவமழையின் போது சென்னையில் உள்ள சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், தேங்கும் நீரை விரைவாக அகற்றவும் தனி குழுவை அமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளை செய்துவருகிறது. அதன்படி, கடந்த வாரத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம்  22 சுரங்கப்பாதைகள் உள்ளன. இவற்றில் 16 சுரங்கப்பாதைகள் மாநகராட்சி  கட்டுப்பாட்டிலும், 6 சுரங்கப்பாதைகள் நெடுஞ்சாலைத்துறையின்  கட்டுப்பாட்டிலும் உள்ளன. இந்நிலையில் பருவமழை காலங்களில் சுரங்கப்பாதைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றவும், கண்காணிக்கவும்  சிறப்பு குழு அமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தலைமை பொறியாளர் (பாலங்கள்) ராஜேந்திரன் தலைமையில் பொறியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

பருவமழைக்கு முன் சுரங்கப்பாதை மற்றும் அனைத்து சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குப்பை மற்றும் மண் குவியலை அகற்றுதல். குழாயில் உள்ள அடைப்புகளை நீக்குதல், நீர் இறைக்கும் வழி அடைபடாமல் உள்ளதா என்று உறுதிபடுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும்.பருவமழையின் போது தேங்கும் நீரை விரைந்து வெளியேற்றுதல், ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு தண்ணீரின் அளவை கண்காணித்து அறிக்கை அளித்தல், சுரங்கப்பாதையின் நிலையை தொடர்பாக சீரான இடைவெளியில் புகைப்படம் எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகள் ஊழியர்கள் செய்ய வேண்டும், என இந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பருவமழைக்கு முன்பும், பின்பும் இந்தப் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று இந்த குழு கண்காணிக்கும். குறிப்பாக பருவமழையின் போது  சுரங்கப்பாதைகளில் இரண்டு பம்பு செட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். இந்த முறை  கூடுதலாக கூடுதலாக ஒன்று சேர்த்து  மொத்தம் 3 பம்பு செட்டுகளை இருப்பு வைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : committee ,Prakash , Mining, track, special committee, commissioner Prakash, directive
× RELATED காணொலி கண்காணிப்பு குழுவால் ஒப்புதல்...