புழல், பல்லாவரம் பகுதிகளில் சாலையில் கொட்டப்படும் உணவு கழிவால் துர்நாற்றம்: நோய் பாதிப்பில் மக்கள்

சென்னை: புழல், காவாங்கரை, கதிர்வேடு, ரெட்டேரி, லட்சுமிபுரம், மாதவரம், சூரப்பட்டு, புத்தகரம், சண்முகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடை, ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகளின் கழிவுகள் புழல் அடுத்த காவாங்கரை தண்டல் கழனி, ஜிஎன்டி சாலை சர்வீஸ் சாலையில் கொட்டப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். அவ்வப்ேபாது, இந்த குப்பை கழிவை மர்ம ஆசாமிகள் தீ வைத்து எரிப்பதால் ஜி.என்.டி. சாலை மற்றும் சர்வீஸ் சாலை புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், மாநில நெடுஞ்சாலை துறையில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘இந்த சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க வரி வசூல் செய்யும் தனியார் நிறுவனத்தினர் சாலையோரம்

குப்பை கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். குப்பை இல்லாத தேசிய நெடுஞ்சாலையாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேசிய நெடுஞ்சாலை துறையினரும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.பல்லாவரம்: பல்லாவரம் நகராட்சியில் மொத்தம் 42  வார்டுகள் உள்ளன. சமீப காலமாக நகராட்சியில் உள்ள தெருக்களில், நகராட்சி நிர்வாகம் முறையாக குப்பை தொட்டிகளை வைப்பது இல்லை. இதனால், சாலைகளில் குப்பை கொட்டப்படுகிறது.

குறிப்பாக பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை  செல்லும் பிரதான சாலையில் உள்ள நடைமேடை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் குப்பையை கொட்டிவிட்டு செல்கின்றனர். அதனை நகராட்சி நிர்வாகம்  முறையாக அப்புறப்படுத்துவதும் கிடையாது. நடைமேடையை ஆக்கிரமித்துள்ள  குப்பைகளால், அவ்வழியே பயணிக்கும் பாதசாரிகள் நடைமேடையை உபயோகப்படுத்த  முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.மேலும், நடைபாதையில் உள்ள குப்பை மற்றும் உணவு கழிவுகளை மாடு, நாய் போன்றவை கிளறுவதால் அந்தப் பகுதியெங்கும் குப்பைகள் சிதறி, கடும்  துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள்  பரவும் அச்சத்தில் பகுதிவாசிகள் உள்ளனர். இது குறித்து அப்பகுதி  பொதுமக்கள் கூறுகையில், ‘‘பல்லாவரம் நகராட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும், நாங்கள்  முறையாக வரி செலுத்தி வருகிறோம். ஆனால் எங்களுக்கான அடிப்படை வசதிகள்  எதையும்  நகராட்சி நிர்வாகம் செய்து தர மறுக்கிறது.

பொதுமக்கள் அதிகம்  குப்பை கொட்டும் இடங்களில், நகராட்சி நிர்வாகம் குப்பை தொட்டிகளை வைத்தால், பொதுமக்கள் குப்பைகளை சாலையில் கொட்டுவது தவிர்க்கப்படுவதுடன்,  சுற்றுப்புறம் சுகாதார சீர்கேடு அடைவதும் தடுக்கப்படும்.

மேலும் மக்களின்  வரிப்பணம் வீணாவதும் தடுக்கப்படும். அதிகாரிகள் தங்களுக்கான கமிஷன் தொகையை மட்டும் எதிர்பார்க்காமல், பொதுமக்களின் நலன் சார்ந்த பணிகளையும் மேற்கொள்ள  முன் வர வேண்டும்’’ என்றனர்.

Related Stories: