60 ஆண்டை கடந்தது தூர்தர்ஷன்: பழைய நினைவுகளை டிவிட்டரில் பகிர்ந்த பார்வையாளர்கள்

புதுடெல்லி: பொழுதுபோக்கே இல்லாமல் இருந்த காலக் கட்டத்தில் கோலோச்சிய தொலைக்காட்சி சேனல் தூர்தர்ஷன் நேற்றுடன் 60 ஆண்டை நிறைவு செய்தது. தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் சோதனை அடிப்படையில் கடந்த 1959ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி டெல்லியில் நிறுவப்பட்டது. பின்னர், 1965ல் சேவை நிறுவனமாக்கப்பட்டது. 1972ம் ஆண்டு மும்பை, அமிர்தசரசிலும் 1975ம் ஆண்டு 7 இதர நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. ஆல் இந்தியா ரேடியோவின் கீழ் செயல்பட்டு வந்த தூர்தர்ஷன், 1976ல் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

அறுபது ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது 34 சாட்டிலைட் சேனல்கள், 104 டிடிஎச் சேவைகளை தூர்தர்ஷன் வழங்கி வருகிறது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் சித்ரகார் (இந்தி ஒலியும் ஒளியும்), மகாபாரதம், ராமாயணம், தேக் பாய் தேக், பவுஜி, மால்குடி டேஸ், ஹம் லோக், புனியாத், சுரபி உள்ளிட்ட தொடர்கள் 1980-90ம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமானவை. இதில், ஒளிபரப்பான பவுஜி தொடரில் நடித்ததன் மூலமே பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பின்னாளில் பிரபலமானார். நேற்றுடன் 60 ஆண்டுகளை நிறைவு செய்த தூர்தர்ஷனில், தங்களுக்கு பிடித்த அம்சம் என்னவென்று பார்வையாளர்கள் டிவிட்டரில் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.அதில் ஒருவர், நிகழ்ச்சிகளை துவங்கும் முன் வரும் தூர்தர்ஷனின் லோகோவும், இசையும் மிகவும் பிடித்த ஒன்று,’ என குறிப்பிட்டுள்ளார். இது போன்று பலர் தூர்தர்ஷன் சேனலில் தங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகள் குறித்து பதிவிட்டுள்ளனர்.

Related Stories: