பேனர் விழுந்து பெண் இன்ஜினியர் பலியான வழக்கில் அதிமுக பிரமுகர் 2வது குற்றவாளியாக அறிவிப்பு: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

சென்னை: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து பெண் இன்ஜினியர் பலியான வழக்கில் பேனர் வைத்த அதிமுக பிரமுகரை 2வது குற்றவாளியாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். சென்னை குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ (23). இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜீனியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 12ம் தேதி மாலை 3 மணியளவில் பணியை முடித்து கொண்டு தனது ஸ்கூட்டரில் துரைப்பாக்கம் - குரோம்பேட்டை 200 அடி ரேடியல் சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

பள்ளிக்கரணை அருகே வந்தபோது ரேடியல் சாலையில் சென்டர் மீடியனில் வைக்கப்பட்டிருந்த பள்ளிக்கரணை அதிமுக பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு பேனர் ஒன்று எதிர்பாராதவிதமாக கழன்று  அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த சுபஸ்ரீயை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பீகாரை சேர்ந்த லாரி டிரைவர் மனோஜ் (25) என்பவரை கைது செய்தனர். சென்னை மாநகராட்சி 189 வார்டு உதவி பொறியாளர் கொடுத்த புகாரின் பேரில் அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், பேனர் அச்சிட்டு தந்ததாக கோவிலம்பாக்கம், விநாயகபுரத்தில் உள்ள அச்சகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தலைமறைவாக உள்ள அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி டிரைவர் மனோஜ் முதல் குற்றவாளியாகவும், 2வது குற்றவாளியாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் சேர்க்கப்பட்டு உள்ளார். இதையடுத்து பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு காவல் நிலைய போலீசார் பதிவு செய்த வழக்கு மற்றும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு ஆகிய 2 வழக்குகளிலும் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை கைது செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

Related Stories: