பால் விலை உயர்வை அடுத்து ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு: 18ம் தேதி முதல் அமல்படுத்த திட்டம்

சென்னை: பால் விலை உயர்வையடுத்து ஆவின் நெய், வெண்ணெய், தயிர் போன்ற பொருட்கள் விலை உயர்வு வரும் 18ம் தேதி அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயிலிருந்து 32 ரூபாயாகவும், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்த்தியும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாகவும், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.  

ஆவின் பால் உயர்வை தொடர்ந்து ஆவின் தயிர், லசி, மோர் மற்றும் கோவா, பேரிச்சை கோவா, மைசூர் பா, பால் பேடா, ஐஸ் கிரீம் உள்ளிட்டவைகளின் விலை எப்போது உயர போகிறதோ என்று அச்சத்திலே இருந்தனர். இந்நிலையில் ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது. இந்த பால்பொருட்களின் விலை உயர்வு வரும் புதன்கிழமை (18ம் தேதி) முதல் அமல் படுத்தவுள்ளனர். அதன்படி ஒரு லிட்டர் நெய் ரூ.460க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.35 விலை உயர்த்தப்பட்டு ரூ.495க்கும், பால் பவுடர் ஒரு கிலோ ரூ.270க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.50 விலை உயர்த்தப்பட்டு ரூ.320க்கும், ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பனீர் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.450க்கும், ஆவின் வெண்ணெய் அரை கிலோ ரூ.230 விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.240க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

அதைப்போன்று ஆவின் பால்கோவா ஒரு கிலோ ரூ.500க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.20 உயர்த்தப்பட்டு  ரூ. 520க்கும், ஆவின் டிலைட் பால் அரை லிட்டர் ரூ.26 விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.4  உயர்த்தப்பட்டு ரூ.30க்கும், நறுமண பால் அரை லிட்டர் ரூ.22க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ. 3 உயர்த்தப்பட்டு ரூ.25க்கும், அரை லிட்டர் தயிர் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ. 27க்கும், ஆவின் கடைகளில் விற்கப்படும் சாதாரண சூடான பால் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.12க்கும் விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Related Stories: